EBM News Tamil
Leading News Portal in Tamil

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வந்தார் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ | Indonesian President Prabowo Subianto arrives to take part in Republic Day celebrations


புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 76வது குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினரான இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, வியாழக்கிழமை (ஜனவரி 23, 2025) இரவு இந்தியா வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரபோவோ சுபியாண்டோவின் இந்தியாவிற்கான முதல் அரசுமுறைப் பயணம் இது. குடியரசு தின நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக புதுடெல்லி வந்த அவரை, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா விமான நிலையம் சென்று வரவேற்றார். இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நான்காவது இந்தோனேசிய அதிபர் இவர் ஆவார்.

இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, இந்தோனேசியாவிலிருந்து 352 பேர் கொண்ட அணிவகுப்பு மற்றும் இசைக்குழு அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தோனேஷிய அதிபரை இன்று சந்தித்துப் பேச உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, இந்தோனேஷிய அதிபர், பிரதமர் நரேந்திர மோடியை நாளை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள். ஹைதராபாத் மாளிகை சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கலந்து கொள்கிறார். குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும், இந்தோனேசிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒரு முக்கிய நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இரு தரப்பு அதிகாரிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே வழக்கமான தொடர்புகள் நடைபெற்று வருகின்றன. ஆசியான் பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் இந்தோனேசியாவும் ஒன்று. 2023-24 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 29.4 பில்லியன் டாலர்களைத் தொட்டது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அதே ஆண்டில் இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தி, இரு தரப்பு விமானப்படைகள், கடற்படைகள் மற்றும் படைகளுக்கு இடையே பணியாளர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது.