கேஜ்ரிவாலுக்கான பாதுகாப்பை திருப்பப் பெற்றது பஞ்சாப் காவல்துறை | Punjab Police withdraw security for Arvind Kejriwal
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் காவல்துறை திரும்பப் பெற்றுக்கொண்டது.
இது தொடர்பாக பாட்டியாலாவில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல்துறை இயக்குநர் ஜெனரல் கௌரவ் யாதவ், “பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவது தொடர்பாக எங்களுக்கு அறிக்கைகள் கிடைத்து வருகின்றன. இதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவித்திருக்கிறோம்.
டெல்லி காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி, இன்று கேஜ்ரிவாலின் பாதுகாப்பில் இருந்த பஞ்சாப் காவல்துறையினரை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம். எங்கள் கவலைகளை அவர்களிடம் தெரிவித்தோம். அவர்களுடன் தொடர்பில் இருப்போம். எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை நாங்கள் டெல்லி காவல்துறையினருடன் பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.