மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது | devotees who took holy dip in Maha Kumbh Mela crossed 10 crores
மகா கும்பமேளா நகர்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.
இதுகுறித்து உத்தர பிரதேச அரசு நேற்று கூறியதாவது: உலகின் மிகப்பெரிய மத விழாவான மகா கும்பமேளா பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 45 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று ஏற்கெனவே மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கங்கை, யமுனை, புராணத்தில் கூறப்பட்ட சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாக கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி 10 கோடி என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது.
கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. புனித நீராடுவதிலும், ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, இந்த எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் இரண்டு மடங்காக உயரக்கூடு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உ.பி. அரசு தெரிவித்துள்ளது.