சயீப் அலி கான் குடும்பத்தினரின் ரூ.15,000 கோடி சொத்து விரைவில் அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது | Saif Ali Khan family faces potential loss of properties
பிரபல நடிகர் சயீப் அலி கான் குடும்பத்தினரின் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள், எதிரி சொத்து சட்டத்தின் கீழ் விரைவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் என தெரிகிறது.
கடந்த 1947-ல் மத்திய பிரதேசத்தின் போபால் மாகாணத்தின் கடைசி மன்னராக நவாப் ஹமிதுல்லா கான் இருந்தார். அவருக்கு 3 மகள்கள் இருந்தனர். அதில் மூத்த மகள் அபிதா சுல்தான் 1950-ல் (பிரிவினைக்கு பிறகு) பாகிஸ்தான் சென்றுவிட்டார். 2-வது மகள் சஜிதா சுல்தான் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். இவர் நவாப் இப்திகார் அலி கான் பட்டவுடியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் பேரன்தான் பிரபல இந்தி நடிகர் சயீப் அலி கான்.
ஹமிதுல்லா கான் குடும்பத்துக்கு மத்திய பிரதேசத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இவற்றின் இப்போதைய மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், சுதந்திரத்துக்குப் பிறகு எதிரி சொத்து சட்டம் (1968) இயற்றப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் குடியேறியவர்களின் சொத்துக்கு மத்திய அரசு உரிமை கொண்டாட இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டத்தின் கீழ், போபால் மன்னர் ஹமிதுல்லா கானின் அனைத்து சொத்துகளும் மத்திய அரசுக்கு சொந்தம் என மும்பையை தலைமையகமாக கொண்ட எதிரி சொத்து காப்பக அலுவலகம் கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தது.
இதை எதிர்த்து சயீப் அலிகான், அவரது தாய் ஷர்மிளா தாகூர், சகோதரிகள் உள்ளிட்ட தாத்தா பட்டவுடி குடும்பத்தினர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். அகமதாபாத் அரண்மனை, நூர்-உஸ்-சபா அரண்மனை உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பல சொத்துகள் தங்களுக்கு சொந்தம் என அதில் கூறியிருந்தனர். இதையடுத்து, அந்த சொத்துகளை மத்திய அரசு கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, எதிரி சொத்துகளுக்கு அதன் உரிமையாளரின் வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அவசர சட்டம் பிறப்பித்தது. இதனிடையே, உயர் நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு சஜிதா சுல்தானை (சயீப் பாட்டி) மன்னரின் வாரிசாக அங்கீகரித்தது.
இந்நிலையில், 2015-ல் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை விலக்கிக் கொள்வதாக கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் அகர்வால் அறிவித்தார். அதேநேரம் 30 நாட்களுக்குள் சயீப் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தார்.
ஆனால், இதுவரை சயீப் குடும்பத்தினர் தீர்ப்பாயத்தை அணுகியதாக தெரியவில்லை. இதனால் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதேநேரம், அந்த சொத்துகளில் குடியிருக்கும் 1.5 லட்டம் பேர் கலக்கமடைந்துள்ளனர்.
பட்டவுடி குடம்பத்தினர் மேல் முறையீடு செய்யாதபட்சத்தில் இந்த சொத்துகளை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். இதனிடையே இதுகுறித்து போபால் மாவட்ட ஆட்சியர் கவுஷலேந்திர விக்ரம் சிங் நேற்று முன்தினம் கூறும்போது, “சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி இந்த சொத்துகள் தொடர்பான 72 ஆண்டு கால ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். சம்பந்தப்பட்ட சொத்துகளில் வசிப்பவர்கள் வாடகைதாரர்களாக கருதப்படுவார்கள்” என்றார்.