தீ பரவுவதாக பீதியில் குதித்த பயணிகள் மீது ரயில் மோதி 11 பேர் பலி – மகாராஷ்டிர ரயில் விபத்து நடந்தது எப்படி? | Train runs over passengers in Maharashtra jalgaon 11 killed
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் உள்ள பச்சோரா ரயில் நிலையம் அருகே ரயில் பயணிகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பயங்கர விபத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அந்த மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஜல்கான் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஜல்கானில் இருந்து மும்பை நோக்கி சென்ற புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள், ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகித்து ரயிலில் இருந்து குதித்தனர். அப்போது சிலர் தண்டவாளத்தில் இறங்கினர். இந்த நிலையில், எதிர் திசையில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் இன்று (ஜன.22) மாலை 5.30 மணி அளவில் நடந்துள்ளது. பயணிகள் மத்தியில் தீ விபத்து குறித்த பீதி ஏற்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிகிறது. புஷ்பக் ரயில் பரதாதே என்ற கிராமத்தை கடந்தபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது உராய்வு காரணமாக தீப்பொறிகள் எழுந்துள்ளன. அந்த ரயிலின் கதவுகளில் அமர்ந்திருந்த பயணிகள் சிலர், அதைப் பார்த்து ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக கருதி தண்டவாளத்தில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர் திசையில் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜல்கான் மாவட்ட எஸ்.பி மகேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஜல்கான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு மீட்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர், ரயில்வே அதிகாரிகள் சென்றுள்ளனர். அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.