9 ஆயிரம் நக்சல்கள் சரணடைந்தனர்: மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல் | 9 thousand Naxals surrendered Union Minister Amit Shah informed
அகர்தலா: பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்த அமைதி உடன்படிக்கைகளால் 9 ஆயிரம் நக்சல்கள் சரணடைந்தனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் நேற்று வடகிழக்கு கவுன்சில் (என்இசி) மண்டலங்களின் 72-வது மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
வடகிழக்கிலுள்ள மாநிலங்களின் வளர்ச்சி குறித்து முந்தைய அரசுகள் அக்கறை கொள்ளாமல் இருந்தன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டது.
அங்கு கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட 20 அமைதி உடன்படிக்கைகள் காரணமாக சுமார் 9 ஆயிரம் நக்சல்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடைந்தனர்.
வடகிழக்குப் பகுதிகளில் நக்சல்கள், மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை ஒடுக்கியுள்ளோம். வடகிழக்கிலுள்ள போலீஸாரின் அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது. இப்பகுதிகளில் நக்சல்களே இல்லாத நிலையை உருவாக்குவோம்.
வடகிழக்கு மாநிலங்களை ரயில்கள் மூலம் இணைக்க ரூ.81 ஆயிரம் கோடியும், சாலை போக்குவரத்துக்காக ரூ.41 ஆயிரம் கோடியும் மத்திய அரசு செலவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.