வீடியோ பதிவுகள் குறித்த தேர்தல் விதிகளில் மாற்றம்: வெளிப்படைத் தன்மை மீது சந்தேகம் எழுப்பும் காங். | Row erupts as Centre tweaks poll rules to curb public scrutiny of video records
புதுடெல்லி: சிசிடிவி காட்சி மற்றும் வேட்பாளர்களின் வீடியோ கட்சிகள் போன்ற சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெறுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு என்பது தங்களின் கூற்றுக்கான நிரூபணம் என்றும், இது தேர்தல் நடைமுறைகளின் ஒருமைப்பாட்டை படிபடியாக அழித்துவிடும் என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை, பொதுமக்களின் ஆய்வுக்கு கிடைக்கும் ஆவணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 93-ல் சில திருத்தங்களை மேற்கொண்டது. இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு தேர்தல் நடத்தை விதி 93 (2) (ஏ)-வில், ‘தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்பு அந்த விதியில், ‘தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என மாற்றப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளரின் வேட்புமனுக்கள், தேர்தல் முகவர்கள் நியமனம், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் போன்ற விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும். மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், “விதிகளை மேற்கோள்காட்டி இதுபோன்ற மின்னணு ஆவணங்களைக் கேட்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த திருத்தம் நடத்தை விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும் என்பதை உறுதி செய்யும். மேலும் விதிகளில் குறிப்பிடப்படாத எந்த ஆவணமும் இனி பொது ஆய்வுக்கு கிடைக்காது” என்று தெரிவித்தனர்.
மேலும் வாக்குச்சாவடிக்குள் சிசிடிவி கேமராக்களை அனுமதித்தால் வாக்களர்களின் ரகசியங்களை தவறாக பயன்படுத்துவதுக்கும் சமரசத்தும் இலக்காகி விடும் என்று அச்சம் தெரிவித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், அதுபோன்ற வீடியோ காட்சிகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்கள் வேட்பாளர்களுக்கு கிடைக்கும். இந்த திருத்தத்துக்கு பின்பும் அவை வேட்பாளர்களுக்கு கிடைக்கும். என்றாலும் பிறர் நீதிமன்றத்தை நாடி அதுபோன்ற மின்னணு ஆவணங்களை பெறலாம் என்று தெரிவித்தனர்.
சமீபத்தில், மெகமூத் பிரச்சா என்ற வழக்கறிஞர், ஹரியானா பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற வாக்குச்சாவடி ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சிகள், வாக்குப் பதிவு தொடர்பான ஆவணங்களின் நகல்களைக் கோரினார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம், பிரச்சா கேட்டிருந்த ஆவணங்களின் நகல்களை வழங்கும்படி தேர்தல் அமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, நீதிமன்ற வழக்கு ஒன்று இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள வழிசெய்தது என்று மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளன.
தேர்தல் ஆணையத்தைச் சாடிய காங்கிரஸ்: தேர்தல் விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் ஏன் வெளிப்படைத் தன்மைக்கு அஞ்சுகிறது என்று கேள்வி எழுப்பியிருக்கும் காங்கிரஸ் கட்சி, இதனை சட்டப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “சமீப காலங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் செயல்படுத்தப்படும் தேர்தல் நடத்தை விதிகளின் ஒருமைப்பாடு வேகமாக அழிந்து வருவது குறித்து எங்களின் கட்சி அடிக்கடிக் கூறி வருவது உண்மையாகி இருக்கிறது என்றால் அது இதுதான்.
சூரிய ஒளி ஒரு சிறந்த கிருமி நாசினி மற்றும் தகவல்கள், ஒரு செயல்பாட்டில் உள்ள நம்பிக்கையை மீட்டெடுக்கும். பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம், தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தையும் பொதுவில் பகிர்ந்து கொள்ளுமாறு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டபோது ஒரு நியாயத்தை ஏற்றுக்கொண்டது. என்றாலும், தலைமைத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்படுவதற்கு பதிலாக, பொதுவில் பகிரக்கூடிய ஆவணங்களைக் குறைக்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள பார்க்கிறது. தேர்தல் ஆணையம் ஏன் வெளிப்படைத் தன்மைக்கு அஞ்சுகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.