ம.பி.யில் கான்ஸ்டபிள் வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல்: கேட்பாரற்று கிடந்த காரில் ரூ.40 கோடி தங்கம் | MP: Lokayukta Raid At Ex-RTO Constable Seized
போபால்: ம.பி.யில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போபாலின் மிண்டோரி வனப் பகுதியில் கேட்பாரற்று கிடந்த காரில் இருந்து 52 கிலோ தங்கத்தை நேற்று பறிமுதல் செய்தனர். போபாலில் திரிசூல் கன்ஸ்ட்ரக் ஷன், குவாலிட்டி குரூப், இஷான் குரூப் உட்பட 51 இடங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் இந்தத் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேட்பாரற்று கிடந்த கார் போலீஸாரால் தேடப்படும் பில்டர் ஒருவரின் பெயரில் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.
அதேபோல் போபால் அரேரா காலனியில் வசிக்கும் சவுரப் சர்மா என்பவர் வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி, சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா சிறப்பு போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இவர் ம.பி. சாலை போக்குவரத்துத் துறை போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். கடந்த ஆண்டுதான் விஆர்எஸ் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில், போபால் பிரிவு லோக் ஆயுக்தா சிறப்பு போலீஸார் சர்மா வீட்டில் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.
இதுகுறித்து லோக் ஆயுக்தா ஏடிஜி ஜெய்தீப் பிரசாத் கூறியதாவது: சவுரப் சர்மா கான்ஸ்டபிள் பணியில் இருந்து விஆர்எஸ் வாங்கிய பிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, ரூ.2.5 கோடி ரொக்கப் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவருடைய உதவியாளர் சந்தன் சிங் கவுர் வீட்டிலும் சோதனை நடந்தது. ரியல் எஸ்டேட் மட்டுமன்றி, ஓட்டல், பள்ளி போன்வற்றிலும் அவர் முதலீடுகள் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. கான்ஸ்டபிளாக 12 ஆண்டுகள் பணியில் இருந்துள்ளார். அந்தக் காலக் கட்டத்திலும் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போபால் மட்டுமன்றி ம.பி.யின் பல நகரங்களிலும் அவருக்கு சொத்துகள் உள்ளன. இவ்வாறு லோக் ஆயுக்தா ஏடிஜி ஜெய்தீப் பிரசாத் கூறினார்.