உ.பி.யின் சம்பல் நகருக்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய போலீஸ்! | Rahul Gandhi stopped at Ghazipur border on way to Sambhal
காசியாபாத்: உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதிக்குச் செல்லும் வழியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். என்றாலும் அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதியை பார்வையிட ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று (புதன்கிழமை) காலையில் காஜிபூர் வந்தடைந்தனர். ஆனால் அங்கு அவர்கள் தொடர்ந்து சம்பலுக்கு நுழையாமல் தடுக்கும் வகையில் போலீஸார் குவிக்கப்பட்டு, சாலையில் தடுப்புகள் போடப்பட்டிருந்தன.
முன்னதாக சம்பல் பகுதியில், பாரதிய நகாரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163 (முன்பு 144 தடையுத்தரவு)-ன் படி கும்பலாக கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இந்த தடையுத்தரவு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்திருந்த நிலையில், தற்போது டிசம்பர் 31-ம் தேதி வரை தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா, கவுதம புத்தா நகர் மற்றும் காசியாபாத் காவல் ஆணையர்கள் மற்றும் அம்ரோஹா மற்றும் புலந்த்ஷாஹர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்களின் மாவட்ட எல்லைகளின் வழியாக சம்பல் வர இருக்கும் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி இருந்தார்.
இந்தநிலையில், “சம்பலில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் நாங்கள் ராகுல் காந்தியை சம்பலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். ராகுல் காந்தி உத்தரப் பிரதேச எல்லையில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்படுவார். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று காசியாபாத் போலீஸ் கமிஷனர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.
ராகுல் காந்தி உள்ளிட்டோர் சம்பலுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதை காங்கிரஸார் கடுமையாக சாடியுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இது சர்வாதிகாரம், நாங்கள் அமைதியான முறையில் சம்பலுக்குச் செல்ல விரும்புகிறோம். ஆனால் தடுத்து நிறுத்தப்படுகிறோம். சம்பலில் வன்முறை நடந்துள்ளது. ஆதனால் தான் நாங்கள் அங்கு செல்கிறோம். அங்கு செல்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது” என்று சாடியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், “போலீஸாரின் துஷ்பிரயோகமான நடவடிக்கையால் ஜனநாயக படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது” என்று சாடியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் கால மசூதி உள்ளது. இதில் கடந்த 24-ம் தேதி இந்திய தொல்லியல் துறை கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்து கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கள ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சம்பல் வன்முறை, கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் உட்பட பலர் காயம் அடைந்தனர்.