EBM News Tamil
Leading News Portal in Tamil

அமெரிக்க குற்றச்சாட்டு எதிரொலி: அதானியை கைது செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல் | Gautam Adani U.S. indictment: Rahul Gandhi demands arrest of industrialist


புதுடெல்லி: லஞ்சம், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்தியத் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

‘சோலார் ஒப்பந்தத்துக்காக அதானி இந்திய அதிகாரிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள்ளார். அதனை மறைத்து போலி அறிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி நிதி பெற்றுள்ளார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களும் இருப்பதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள இந்தக் குற்றச்சாட்டின் மூலமாக இந்திய மற்றும் அமெரிக்க சட்டத்தை அதானி மீறியுள்ளது அம்பலமாகியுள்ளது. இருந்தும்கூட, அதானி இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறதிது.

இந்த நாட்டில் பல முதல்வர்கள் எளிதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால், ரூ.2000 கோடி ஊழல் செய்தவருக்கு பிரச்சினையே இல்லை. அவர் கைது செய்யப்பட மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் அதானியை இந்திய பிரதமர் பாதுகாக்கிறார். மோடி – அதானி ஊழலில் கூட்டு என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.