50 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற டெல்லி அரசு உத்தரவு | Delhi government orders 50 percent employees to work from home
காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
வாகன போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால், அங்குள்ள மக்கள் மூச்சுவிடுவதற்கே சிரமப்படும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகன பயன்பாட்டை குறைக்க அரசு பணியில் உள்ள 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தியாவசி சேவைகளான, சுகாதாரம், பொது போக்குவரத்து, துப்புரவு, தீயணைப்பு, சட்ட அமலாக்கம், மின்சாரம், தண்ணீர் சுத்திகரிப்பு, அவசர கால சேவை உள்ளிட்ட துறைகள் தொடர்ந்து முழு பணியாளர் திறனில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த துறைகளில் அனைத்து பணியாளர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சி உட்பட 80 துறைகள் மற்றும் பல்வேறு ஏஜென்சிகளைக் கொண்ட டெல்லி அரசில் 1.4 லட்சம் பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.