தன்னுடைய புகைப்படங்களை மனைவி பயன்படுத்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆட்சேபம் | BSP leader objects to use of his photos by Congress MLA wife
தன்னுடைய புகைப்படங்களை மனைவியும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான அனுபா முஞ்சாரே பயன்படுத்துவதற்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் கங்கர் முஞ்சாரே ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்தவர் கங்கர் முஞ்சாரே. இவரது மனைவி அனுபா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பாலகாட் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய அனுபா, போஸ்டர்கள், பதாகைகளில் தனது கணவர் படத்தைப் பயன்படுத்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கங்கர் முஞ்சாரே, போஸ்டர்கள், பதாகைகளை கிழித்துப் போட்டுள்ளார்.
இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான கங்கர் முஞ்சாரே கூறியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போதே, என்னுடைய புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று மனைவி அனுபாவிடம் கூறிவிட்டேன். இப்போது எனது சொல்லை மீறி போஸ்டர்களில் எனது புகைப்படங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
என்னுடைய அனுமதியின்றி புகைப்படங்களை பயன்படுத்துவது தவறாகும். என்னை இழிவுபடுத்தி விட்டனர். நான் ஒரு கட்சியில் இருக்கிறேன். அவர் ஒரு கட்சியில் இருக்கிறார். இந்நிலையில் என்னுடைய புகைப்படங்களை எப்படி பயன்படுத்த முடியும்? இந்த முறை எச்சரிக்கை செய்கிறேன். அடுத்த முறை இதை அவர் செய்யமாட்டார் என நம்புகிறேன். அப்படிச் செய்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.