மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல் | Most exit polls predict victory for BJP-led alliances in Maharashtra, Jharkhand
மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நேற்று மாலை 5 மணி வரை 58 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜார்க்கண்ட்டில் இன்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 68 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் இரு மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக இங்கு 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மகாராஷ்டிரா முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இங்கு மகாயுதி கூட்டணியில் பாஜக 149, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி) 81, தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101, சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 95, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 86 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பகுஜன் சமாஜ் கட்சி 237 வேட்பாளர்களையும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 17 வேட்பாளர்களையும் நிறுத்தியிருந்தது. இங்கு தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது.
இங்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் மாலை 5 மணி வரை 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பீட் தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பாலஷாகிப் ஷிண்டே, வாக்குச்சாவடிக்கு வந்தபோது நிலைகுலைந்து விழுந்து இறந்தார். இங்கு, மறுதேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில், 43 தொகுதிகளில் கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் மீதமுள்ள 38 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 14,218 வாக்குச் சாவடிகளில் 1.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இன்று மாலை 5 மணி வரை 68 சதவீத வாக்குகள் பதிவாகின. மகராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட்டில் இன்று சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாயின. ‘மேட்ரிஸ்’ மற்றும் ‘பீப்புள்ஸ் பல்ஸ்’ உட்பட பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. அதில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு வெற்றிவா்ய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொங்கு சட்டசபை: பி-மார்க் மற்றும் லோக்ஷாகி மராத்தி- ருத்ரா என்ற நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி தொங்கு சட்டசபை ஏற்படும் சூழல் உள்ளது. பி-மார்க் கருத்து கணிப்பில் மகாயுதி 137 முதல் 157 இடங்களையும், மகாயுதி 126 முதல் 146 இடங்களையும் கைப்பற்றும் எனவும், லோக்ஷாகி மராத்தி-ருத்ரா கருத்துக்கணிப்பில் மகாயுதி 128 முதல் 142 இடங்களையும், மகா விகாஸ் கூட்டணி 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
15 தொகுதிகளில் இடைத் தேர்தல்: உத்தர பிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. உத்தர பிரதேசத்தில் காஜியாபாத், கதேஹரி, கையர், குண்டர்கி, கர்ஹல், மஜ்ஹாவன், மீராபூர், புல்பல், சிசாமா ஆகிய 9 தொகுதிகளில் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் சட்டப்பேரவை தொகுதி, பஞ்சாப்பின் தி கித்தர்பஹா, தேரா பாபா நானக், பர்னாலா, சபேவல் சட்டப் பேரவை தொகுதிகள், கேரளாவின் பாலக்காடு ஆகியவற்றிலும் இடைத் தேர்தல் நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தில் மாலை 5 மணி வரை 50 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. உத்தர பிரதேசத்தில் புகார் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்ட 5 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்ப்ட்டதாக உத்தர பிரதேச தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்தார். உ.பி. மீராபூர் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் கக்ரோலி கிராமத்தில் இரு குழுவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.