EBM News Tamil
Leading News Portal in Tamil

தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை | Deepotsav 2024: Ayodhya creates two Guinness World Records on Diwali eve


அயோத்தி: தீப உற்சவத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டன. இது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தியும் எடுத்தனர்.

ராமர் வனவாசத்தை முடித்து விட்டு அயோத்தி திரும்புவதை , தீபாவளியாகவும், தீப உற்சவமாகவும் வட இந்தியாவில் 5 நாள் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபின், அங்கு முதல் முறையாக நடைபெறும் தீப உற்சவத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த உத்தர பிரதேச அரசு முடிவு செய்தது. இதற்காக ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரையின் 55 படித்துறைகளில் நேற்று 28 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கப்பட்டன. மாசுவை குறைக்க கோயிலுக்கு வெளியே மெழுகு விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. விளக்கேற்றும் நிகழ்ச்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் இங்கு இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் முறியடிக்கப்பட்டன. கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை சேர்ந்த 30 பேர் குழுவினரும் இங்கு வந்திருந்தனர். அவர்கள் டிரோன்கள் மூலம் விளக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சரயு நதிக்கரையில் 1,100 புரோகிதர்கள் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சிக்கும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உட்பட பலர் கலந்து கொண்டனர். தீப உற்சவத்தை முன்னிட்டு சோபா யாத்ரா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 6 நாடுகள், மற்றும் 16 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இங்கு கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

அயோத்தி தீப உற்சவத்தை முன்னிட்டு, 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தீப உற்சவத்தை பார்வையிட பல்லாயிர கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். இவர்கள் தீப உற்சவத்தின் முழு காட்சியையும் பார்வையிட ஆங்காங்கே எல்இடி திரைகளும் பொருத்தப்பட்டிருந்தன.