EBM News Tamil
Leading News Portal in Tamil

உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கண்ணா: மத்திய அரசுக்கு சந்திரசூட் பரிந்துரை | Chief Justice DY Chandrachud proposes Justice Sanjiv Khanna as his successor


புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு வயது 65 ஆகும். அதன்படி, தலைமை நீதிபதிசந்திரசூட் வரும் நவம்பர் 10-ம்தேதி ஓய்வு பெறுகிறார்.

இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்ததலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில், தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்றதலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.

சஞ்சீவ் கண்ணா கடந்த1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். 1980-ம் ஆண்டு டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் சட்டம் பயின்றார். 2016-ம்ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2019-ம்ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா உள்ளார். இந்த சூழலில், அடுத்த தலைமை நீதிபதியாக அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், சந்திரசூட் ஓய்வுபெற்ற பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்பார். 2025 மே 13 வரை 6 மாதத்துக்கு அவர் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.