EBM News Tamil
Leading News Portal in Tamil

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணம் ‘சதி’யா? – என்ஐஏ விசாரணை | NIA arrives at Kavarapettai to probe sabotage angle


சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில் ‘சதி திட்டம்’ ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தனது விசாரணையை தொடங்கி உள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரில் வந்து என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்துக்கு சதி காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து நடந்த இடத்தில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவிடம் என்ஐஏ அதிகாரிகள் தகவல் கேட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கும்மிடிபூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. 19 பயணிகள் காயங்களுடன் தப்பித்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சிலர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் மூவர் கடுமையான காயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் மதுக்கர் சவுத்ரி இன்று (அக்.12) நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ரயில்வே தண்டவாளங்கள், இணைப்பு பாதைகள், தடுப்புகள், சிக்னல்கள், ரயில் நிலைய எலெக்ட்ரானிக் உள்இணைப்பு அமைப்புகள், கன்ட்ரோல் பேனல்கள் உள்ளிட்ட ரயில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ரயில்வே துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் மதுக்கர் சவுத்ரி, “விபத்து நடந்த இடத்தை பார்வையிடவே இங்கு வந்திருக்கிறேன். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த அறிவதற்கு முதலில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட வேண்டும். பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்க வேண்டும். முழு விசாரணைக்கப் பிறகே விபத்துக்கான காரணம் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்” என தெரிவித்தார்.

விபத்துக்கு சதி காரணமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “இந்த தருணத்தில் நான் எதையும் தெரிவிக்க முடியாது. தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும். விசாரணை அடுத்த வாரம் தொடங்கும்” என தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், “மீட்புப் பணிகள்தான் முதன்மையானது. மிகப் பெரிய விபத்துதான் என்றாலும், அதிருஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை. 8 பேர் மட்டுமே காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த அரை மணி நேரத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், சிலர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு மட்டுமே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு சிறிய காயங்கள்தான் ஏற்பட்டுள்ளன. யாரும் ஆபத்தான நிலையில் இல்லை. சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இன்று இரவுக்குள் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுவிடும்” எனத் தெரிவித்தார்.