EBM News Tamil
Leading News Portal in Tamil

போர்ட் பிளேரின் பெயர் ‘ஸ்ரீ விஜயபுரம்’ என மாற்றப்படும்: அமித் ஷா | Port Blair to be renamed as ‘Sri Vijayapuram’, says Amit Shah


புதுடெல்லி: அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அனைத்து அடிமைச் சின்னங்களில் இருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானத்தால் ஈர்க்கப்பட்டு, இன்று உள்துறை அமைச்சகம் போர்ட் பிளேருக்கு ‘ஸ்ரீ விஜயபுரம்’ என்று பெயரிட முடிவு செய்துள்ளது. ‘ஸ்ரீ விஜயபுரம்’ என்ற பெயர் நமது சுதந்திரப் போராட்டத்தையும், அதில் அந்தமான் நிக்கோபார் பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.

இந்த தீவு நமது நாட்டின் சுதந்திரத்திலும் சரித்திரத்திலும் தனித்துவம் பெற்றுள்ளது. சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய இந்தத் தீவு, இன்று நாட்டின் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் துரிதப்படுத்தத் தயாராக உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதன்முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய இடமாகவும், வீர சாவர்க்கரும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களும் செல்லுலார் சிறையில் இந்தியத் தாயின் சுதந்திரத்திற்காகப் போராடிய இடமாகவும் இந்த தீவு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.