காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை | firecrackers banned in Delhi till January 1 to control air pollution
புதுடெல்லி: காற்று மாசை கட்டுப்படுத்துவ தற்காக வரும் ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் தலைநகரில் கடும் காற்றுமாசுபாடு ஏற்பட்டது. இதனால்பள்ளி குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மூச்சுத் திணறலில் பாதிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காற்று மாசுபாட்டை தடுக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று கூறியதாவது: குளிர் காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த ஆண்டைப் போலவேஇந்த ஆண்டும் பசுமை பட்டாசு உட்பட அனைத்து வகையான பட்டாசுகள் உற்பத்தி, சேமிப்பு,விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குமுழு தடை விதிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கவும் தடை விதிக்கப்படுகிறது.
வரும் 2025 ஜனவரி 1-ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும். இந்தத் தடையை அமல்படுத்த, காவல் துறை, டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
பண்டிகையை கொண்டாட வேண்டியது அவசியம்தான். அதேநேரம், காற்று மாசுபடுவதையும் நாம் தடுக்க வேண்டும். பொதுமக்கள் தீபங்களை ஏற்றியும் இனிப்புகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாட வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நம்அனைவருக்கும் உள்ளது. டெல்லியில் வசிக்கும் ஒவ்வொருவரும் மாசு எதிர்ப்பு போராளியாக மாறினால் காற்று மாசு அபாயத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.