EBM News Tamil
Leading News Portal in Tamil

அமித்ஷாவுடன் தமிழிசை சந்திப்பு ஏன்? | Why the Tamilisai meeting with Amit Shah


சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், இந்த முறை கூட்டணியின் பலத்தில் பாஜக ஆட்சியமைத்திருக்கிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் கட்சியின்பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைகளும் உயர்மட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, டெல்லியில் நேற்றுமுன்தினம் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர்தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பாஜகவில்தேசியஅளவில் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பணிகள்மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அமித்ஷாவுடனான தமிழிசையின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்மூலம் கட்சி தரப்பில் தேசிய அளவிலான பொறுப்பு தமிழைசைக்கு வழங்கப்படலாம் என கருதப்படுகிறது.

அண்ணாமலை லண்டன் பயணம்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தியாவில் 12 பேருக்கு அரசியல் குறித்து பயில்வதற்கான ஃபெலோஷிப் திட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த 12 பேரில் தமிழகபாஜக தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இதற்காக அவர் 6மாதகாலம் லண்டன் செல்கிறார்.

இதற்கான விசா பணிகள் முடிவடைந்த நிலையில், அவர்விரைவில் லண்டன் செல்கிறார். அவரது வெளிநாடு பயணத்தின்போது கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை, தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் கவனித்துக் கொள்வார் எனவும், லண்டனில் இருந்தபடியே கட்சியின் பணிகளையும் அண்ணாமலை கவனித்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவராக எல்.முருகனை நியமிக்கும் வரைசுமார் 6 மாதங்களுக்கு மேலாக தமிழக பாஜக தலைவர் இல்லாமல் இயங்கியது குறிப்பிடத்தக்கது.