EBM News Tamil
Leading News Portal in Tamil

எடியூரப்பாவுக்கு எதிராக காங்கிரஸ் சதியா? – குமாரசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் சித்தராமையா மறுப்பு | Siddaramaiah rejects charges of vendetta politics


பெங்களூரு: கர்நாடகாவில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கடந்த மார்ச் 14-ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவரும் எடியூரப்பாவின் இளைய மகனுமான விஜயேந்திரா கூறுகையில், ‘‘இந்த வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும். நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. எடியூரப்பாவுக்கு எதிராக சதி அரசியல் நடக்கிறது. இதை சட்டப்படி அவர் வெல்வார்” என்றார்.

மத்திய அமைச்சரும் மஜத தலைவருமான குமாரசாமி கூறும் போது, ‘‘எடியூரப்பா மீதான பாலியல் வழக்கில் காங்கிரஸ் அரசின் சதி இருக்கிறது. அவர் திட்டமிட்டு இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரத்தை வைத்து தேவகவுடா குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தினர். இப்போது எடியூரப்பாவுக்கு அவமரியாதை உருவாக்க முயல்கின்றனர். இந்த பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவோருக்கு கர்நாடக மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள்” என விமர்சித்தார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், ”நான் ஒருபோதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டதில்லை. எதிர்காலத்திலும் அத்தகைய அரசியலில் ஈடுபட மாட்டேன். போலீஸாரின் விவகாரங்களில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை. எடியூரப்பா வழக்கில் போலீஸார் சட்டப்படி செயல்படுகின்றனர்” என விளக்கம் அளித்தார்.