EBM News Tamil
Leading News Portal in Tamil

மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா மீண்டும் பொறுப்பேற்பு | Amit Shah takes charge as Union Home Minister


புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றதை அடுத்து, நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 9-ம் தேதி பதவியேற்றது. இதனையடுத்து, யார் யாருக்கு எந்தெந்த இலாகா என்ற விவரம் நேற்று (ஜூன் 10) அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மத்திய உள்துறை அமித் ஷாவுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. அதேபோல், கூட்டுறவுத் துறையும் மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை உள்துறை அமைச்சகத்துக்கு வந்த அமித் ஷா, தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, கூட்டுறவுத் துறை அமைச்சகத்துக்குச் சென்ற அமித் ஷா, அந்த துறையின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். முன்னதாக, டெல்லியில் உள்ள தேசிய காவல் துறை நினைவுச் சின்னத்துக்குச் சென்ற அமித் ஷா, பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல், பல்வேறு அமைச்சர்களும் இன்று தங்கள் துறை அலுவலகத்துக்குச் சென்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மீண்டும் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். தனது அமைச்சகத்துக்கு வந்த அவருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ரயில்வே, தகவல் – ஒலிபரப்புத்துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தகவல் – ஒலிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் துறைகளின் அமைச்சராக பூபேந்தர் யாதவ் பதவியேற்றுக்கொண்டார். இந்த துறைகளின் இணை அமைச்சரான கீர்த்தி வர்தன் சிங்கும் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஜவுளித் துறை அமைச்சராக கிரிராஜ் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, இத்துறையின் முன்னாள் அமைச்சரான பியூஷ் கோயல் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தார். இத்துறையின் இணை அமைச்சரான பபித்ரா மார்கெரிட்டாவும் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சராக சுரேஷ் கோபி பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அத்துறையின் அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தார்.

எரிசக்தித் துறை அமைச்சராக மனோகர் லால் கட்டார் இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதேபோல், ஜிதேந்திர சிங், ஜெயந்த் சவுத்ரி, சீராக் பாஸ்வான், எல்.முருகன், ஜெ.பி. நட்டா, சஞ்சய் சேத், கஜேந்திர சிங் ஷெகாவத், சிவராஜ் சிங் சவுகான், ஹர்தீப் சிங் பூரி, ஜிதன் ராம் மாஞ்சி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரிண் ரிஜிஜூ, லாலன் சிங், பிரதாப் ராவ் கன்பத் ராவ் ஜாதவ், அன்னபூர்ணா தேவி, பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.