EBM News Tamil
Leading News Portal in Tamil

“இன்று இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் முன்பு அதற்கு எதிராகப் பேசியது” – ராகுல் காந்தி  | RSS had spoken about opposing quotas in past  says Rahul Gandhi


டாமன்: ஆர்எஸ்எஸ் இன்று இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்று கூறினாலும் முன்பு அவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்துப் பேசியுள்ளனர் என்று வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டாமன் யூனியன் பிரதேசத்தின் டாமன், டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி தொகுதிகளுக்காக நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸின் வயநாடு எம்.பி.,யும், கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்களின் தலைவர்களை இந்த நாட்டின் ராஜாக்களாக ஆக்குவதற்காக அரசியல் அமைப்பின் பல்வேறு அமைப்புகளை அழிக்க முயற்சிக்கின்றன.

ஆர்எஸ்எஸ் நாங்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்று இன்று சொல்லலாம் ஆனால் முன்பு அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினார்கள். அரசியல் அமைப்பே அனைத்துக்கும் அடித்தளமாக செயல்படுகிறது. அதன் விதைகளில் இருந்த பிற அமைப்புகள் உருவாகின. அவர்கள் அரசியலமைப்பை அழிக்க விரும்புகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தை அதன் பல்வேறு நிறுவனங்களை அழிக்க விரும்புகிறார்கள். பின்னர் ஆர்எஸ்எஸ் – பாஜக தலைவர்களை இந்த நாட்டின் அரசர்களாக்க விரும்புகிறார்கள். ஆர்எஸ்எஸ் – பாஜக மற்றும் காங்கிரஸ் இடையிலான சண்டை கருத்தியல் ரீதியானது. காங்கிரஸ் அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக வாக்குகள் கேட்கிறது.

அடிப்படையில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் அரசியலமைப்பையும், அது இந்தியாவுக்கு வழங்கிய அனைத்தையும் பாதுகாக்கிறோம். மறுபுறம் எப்படியாவது அரசியலமைப்பை அழித்துவிட வேண்டும் என்பதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் இலக்கு.” இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

முன்னதாக, ஹைதராபாத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க தலைவர் மோகன் பாகவத், ”அரசியல் அமைப்பின் படி ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டை ஆதரித்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.