3-வது முறையாக முடிசூடும் மோடி? – 3 மாநிலத் தேர்தல் முடிவுகளும், பாஜக வெற்றிக்கு வழி செய்த வியூகங்களும்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் என 3 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள், மூன்றாவது முறையாகவும் மோடியே பிரதமராக முடிசூடுவார் என்ற நம்பிக்கையை பாஜகவினருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் வாக்குகள் எண்ணப்பட்ட 5 மாநிலத் தேர்தல்களில், மிசோரம் மாநிலம் தேசிய கட்சிகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. தெலங்கானா தேர்தலில், அந்த மாநிலத்தை நிர்மாணித்த கே.சந்திரசேகர் ராவை புறக்கணித்து, அடுத்த இடத்திலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு தந்திருக்கிறார்கள். இந்த 2 மாநிலங்களுக்கும் அப்பால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலத் தேர்தல் முடிவுகளே பெருமளவில் கவனம் பெற்றிருக்கின்றன. பாஜகவுக்கு உத்வேகத்தை தந்ததோடு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினருக்கு படிப்பினைகளையும் வாரி வழங்கியுள்ளன.