EBM News Tamil
Leading News Portal in Tamil

“மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” – சுப்ரியா சுலே @ 3 மாநில முடிவுகள் | Will Not Impact 2024 Polls Supriya Sule On Assembly Election Results


புதுடெல்லி: “ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2024 மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கும் முடிவுடன் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணிக்காக கட்சிகளை இணைக்கும் வேலைகளில் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாகதான் பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு வருத்தத்தையே அளித்துள்ளன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களை பாஜக வசப்படுத்துகிறது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி உறுதியான வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, “லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் வேறு வேறு. தற்போதைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூற முடியாது. 2019-ல், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது. ஆனால், மக்களவைத் தேர்தலில் வேறு ஏதோ நடந்தது. நாம் முன்கூட்டியே எதையும் சொல்லிவிட முடியாது. இந்த தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கான் லிட்மஸ் சோதனை என்றும் கூற முடியாது. யார் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், நாம் அந்த முழு அணியையும் வாழ்த்த வேண்டும், ஆனால் இறுதி முடிவுகளுக்காக காத்திருப்பது அவசியம். தற்போதைய போக்கு பாஜகவுக்கு சாதகமாக உள்ளது, அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களையும் வாழ்த்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணி: கடந்த ஜூன் மாதம் இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவில் நடைபெற்றது. அப்போதுதான் கூட்டணிக்கு ‘இண்டியா’ என்ற பெயரும் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. தற்போது இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிச.6-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.