EBM News Tamil
Leading News Portal in Tamil

“எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சி அடையாது” – உள்துறை அமைச்சர் அமித் ஷா | Country cannot develop if borders are not secure – Home Minister Amit Shah


ஹசாரிபாக்(ஜார்க்கண்ட்): எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சியும், செழிப்பும் காணாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டதன் 59-ம் ஆண்டு விழா ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித் ஷா, எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மத்தியில் பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது. ஜி20 மாநாடு, சந்திரயான்-3 போன்ற வெற்றிகளின் பின்னால் எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளது. ஒரு நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் அந்த நாட்டுக்கு வளர்ச்சியும் செழிப்பும் இருக்காது. இதற்கான உங்களின் தியாகம் அளப்பறியது. நாட்டின் வளர்ச்சிக்குப் பின்னால் உங்களின் தியாகம் உள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை தினத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது வீரர்களால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது. பாகிஸ்தான் எல்லையாக இருந்தாலும், பங்களாதேஷ் எல்லையாக இருந்தாலும் அங்கே எதிரியின் நகர்வு இருந்தால் அல்லது பதற்றம் இருந்தால் அங்கே நமது எல்லைப் பாதுகாப்புப் படை இருக்கிறது என்பதால், என்னால் பதற்றம் இன்றி அமைதியாக உறங்க முடிகிறது. எல்லைப் பாதுகாப்பில் இருப்பவர்கள் வலிமையாக இருக்கும்போது, பதற்றத்துக்கு இடம் இருக்காது. உள்துறை அமைச்சராக உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.

இடதுசாரி தீவிரவாதத்தின் நிலை குறித்து நேற்று ஆய்வு செய்தேன். நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான இறுதிக்கட்டப் பணியில் நாம் இன்று இருக்கிறோம். இடதுசாரி தீவிரவாதத்தில் இருந்து நாடு முற்றிலும் விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை. இடதுசாரி தீவிரவாதம் நாளுக்கு நாள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. சிஆர்பிஎஃப், ஐடிபிபி, பிஎஸ்எஃப் ஆகியவை இறுதிக்கட்டத் தாக்குதலை நடத்த தயாராக உள்ளன. இடதுசாரி தீவிரவாதத்தில் இருந்து நாட்டை விடுவிப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். வரும் நாட்களில் இது நடக்கும். கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதால் இடதுசாரி தீவிரவாதம் குறைந்து வருகிறது. ஜார்க்கண்ட்டின் சில பகுதிகளில் இன்னும் சண்டை எஞ்சி இருக்கிறது. அந்த சண்டையில் நாம் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.