தேர்தல் ஆணையம் விரும்பும்போது தேர்தல் நடத்த தயார்: காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா | Ready to hold polls in Jammu and Kashmir whenever Election Commission wants: Governor Manoj Sinha
ஜம்மு: தலைமைத் தேர்தல் ஆணையம் விரும்பும்போது யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில் தேர்தலை நடத்த நிர்வாகம் தயாராக இருப்பதாக அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலை நடத்திய பின்பே மாநிலத்தை விட்டு வெளியேறுவேன் என்றும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய துணைநிலை ஆளுநர் மனோஜ் கூறியதாவது: “ஜம்மு காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து விவரங்களும் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் நடத்த வேண்டுமென்று விரும்புகிறதோ அப்போது தேர்தலை நடத்த மாநில நிர்வாகம் தயாராக இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் உரிமை தலைமைத் தேர்தல் ஆணையத்திடமே உள்ளது.
தேசத்தின் விருப்பத்தை ஜம்மு காஷ்மீரில் நடைமுறைப்படுத்துவதே எனக்கான பணியாக இருந்தது. அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதுதான் என் வேலை, நான் அதனைச் செய்திருக்கிறேன். இங்கிருந்த தீவிரவாத குழுக்களின் தலைவர்கள் அனைவரும் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் மீதமிருக்கும் சிலரும் விரைவில் ஒழிக்கப்படுவார்கள். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு இடமில்லை.
ராணுவம், சிஆர்பிஎஃப், காவல்துறையினரிடையே நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. நமது அண்டை வீட்டாரிடமிருந்து தாக்குதலுக்கான சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக சில ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அந்தப் படுகொலையைச் செய்தவர்கள் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியது இருக்கும்” இவ்வாறு துணைநிலை ஆளுநர் தெரிவித்தார். மேலும், 3000 பண்டிட்களுக்கு வேலைவாய்ப்பும் வீடும் வழங்கும் முயற்சியை ஜம்மு காஷ்மீர் அரசு மேற்கொள்வதை ஒப்புக்கொண்ட ஆளுநர் அவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு கூடுதல் நடவடிக்கைகள் வேண்டும் என்று வலியுறுத்தினார்.