EBM News Tamil
Leading News Portal in Tamil

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் பாரத் பெயரும், இந்துக் கடவுளின் படமும் – என்ன நடந்தது? | NMC changes logo adds image of ayurveda god


புதுடெல்லி: தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commision) சின்னத்தில் இந்துக் கடவுளின் புகைப்படமும், பாரதம் என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அதன் விதிகளை மாற்றியது. இந்தப் புதிய மாற்றங்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ஆயுர்வேதத்தின் கடவுளாக அறியப்படும் தன்வந்திரியின் (Dhanwantari) புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்குப் பதிலாக ‘பாரதம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல கண்டனக் குரல்கள் எழுந்த காரணத்தினால், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் பி.என்.கங்காதர் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கெனவே கருப்பு – வெள்ளையில் இருந்தது. தற்போது நிறம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்பட்டபோது லோகோவில் தன்வந்திரியின் புகைப்படத்தை சின்னத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்தும் கடவுளாக தன்வந்திரி இருக்கிறார்” என தெரிவித்துள்ளார். அதேபோல ‘பாரதம்’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதும் உண்மைதான், அப்படிச் செய்வதற்குப் பின்னால் வேறு எந்தக் காரணமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் G20 மாநாடு நடைபெற்று முடிந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள வரும் உலகத் தலைவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரிய சர்ச்சையை கிளப்பியது.