சூதாட்ட செயலி மோசடி: நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத் துறை சம்மன் | Actor Ranbir Kapoor Summoned By Enforcement Directorate In Gaming App Case
டெல்லி: சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என ரன்பீர் கபூருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் துபாயை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் செயல்படும் ஓர் ஆன்லைன் சூதாட்ட செயலியில் கோடிக்கணக்கில் பண மோசடி நடந்திருப்பதாக அமலாக்கத் துறை கண்டறிந்தது. இந்த சோதனையின் முடிவில் 417 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த செயலியை விளம்பரம் செய்ய நடிகர் ரன்பீர் கபூர் பணம் வாங்கியிருப்பதாகவும், அந்தப் பணம் அந்நிறுவனம் குற்றச் செயல்களின் மூலம் ஈட்டிய வருமானம் என்றும் அமலாக்கத் துறை குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்கவே ரன்பீர் கபூருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ரன்பீர் கபூர் மட்டுமல்ல, இதே வழக்கில் பல நடிகர்கள் சிக்கியிருக்கின்றனர் என்றும், அவர்கள் அனைவரும் அமலாக்கத் துறை கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.