”தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” – பிரதமர் மோடி பேச்சு | Telangana does not need fake promises; They need a BJP government’ Prime Minister
மகபூப்நகர் (தெலங்கானா): “தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்களுக்கு போலியான வாக்குறுதிகள் தேவையில்லை. களத்தில் வேலை நடக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று (அக்.1) பிற்பகலில் சாலை, ரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில், ரூ.13.500 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரயில் போக்குவரத்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் மாலை, மெகபூப்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர், “தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் பாஜக அரசை விரும்புகிறார்கள். தெலங்கானா மக்கள் ஊழல் நிறைந்த அரசை விரும்பவில்லை. வெளிப்படையான நேர்மையான அரசை மக்கள் விரும்புகிறார்கள். தெலங்கானா மக்களின் வாழ்கையை மேம்படுத்த பாஜக உறுதி பூண்டுள்ளது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் ஆதினியம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், வரும் காலங்களில் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் மாநில முதல்வர் கே.சந்திர சேகரராவ் கலந்து கொள்ளவில்லை. மாநில அமைச்சரே பிரதமரை வரவேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனிடையே, வளர்ச்சி பணிகளில் தொடப்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளை கேசிஆர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சரும், தெலங்கானா மாநில பாஜக தலைவருமான கிஷன்ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தேர்தலைச் சந்திக்க உள்ள தெலங்கானா மாநிலத்திற்கு பிரதமரின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.