இந்திய மொழியில் சட்டங்கள் உருவாக்கப்படும்: சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி | Laws will be made in Indian language: PM Narendra Modi assures International Lawyers Conference
புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சட்டங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பார் கவுன்சில் சார்பில் டெல்லியில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இருநாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்திய விடுதலைப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் மிகத் தீவிரமாக பங்கேற்றனர். தேசத் தந்தை காந்தியடிகள், நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமர் நேரு, முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல், லோகமான்ய திலகர், வீர சாவர்க்கர் உள்ளிட்டோர் வழக்கறிஞர்கள் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாட்டின் ஜனநாயகத்தை கட்டிக் காப்பாற்றியதில் வழக்கறிஞர்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில்பெண்கள் தலைமையிலானவளர்ச்சிக்கு புதிய பாதை திறந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு நிலவின் தென் துருவத்தில் இந்தியா வெற்றிகரமாக கால் பதித்தது. இதுபோல் பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வரும் இந்தியா, வரும் 2047-ம்ஆண்டில் வளர்ந்த நாடாக உருவெடுக்கும்.
பழங்காலத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பஞ்சாயத்துநடைமுறை அமலில் இருந்தது. அதன் அடிப்படையிலேயே இப்போது லோக் அதாலத் நடைமுறை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்த நடைமுறையில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன.
தமிழில் தீர்ப்பு: அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான மொழியில் சட்டங்கள் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு புதியசட்டங்கள் எளிமையான மொழியில் எழுதப்படுகின்றன. மேலும் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சட்டங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தரவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதன்மூலம் சமானிய மக்களும் தீர்ப்புகளைப் படித்து புரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக உச்ச நீதிமன்றத்தை மனதார பாராட்டுகிறேன்.
சர்வதேச அளவில் சைபர் தாக்குதல், செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்துவது, பண மோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் மிகப்பெரிய சவால்களாக உருவெடுத்து வருகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு ஒரு நாடு, ஓர் அரசால் தீர்வு காண முடியாது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வதேச அளவில் வலுவான சட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.