EBM News Tamil
Leading News Portal in Tamil

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு: கர்நாடகா முழுவதும் பாஜக போராட்டம் | BJP holds protest in Karnataka demanding not to release water from the Cauvery river to Tamil Nadu


பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது. தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கடந்த 18-ம்தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், கர்நாடக அரசுக்கு உத்தரவிரப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என தெரிவித்தது.

இந்நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாஜக இன்று ஈடுபட்டது. பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் போதுமான மழை பொழியாத நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்குவது கர்நாடகாவின் நலனுக்கு எதிரானது.

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கும் மாநில அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் உற்பத்தியாகும் நதி காவிரி. எனவே, காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம். இது தமிழகத்தின் சொத்து அல்ல. இருந்தபோதும், அவர்கள் காவிரி நீரை பெற்று வருகிறார்கள். கர்நாடகா அணைகளைக் கட்டியதால்தான் தமிழகத்துக்கு தற்போது தண்ணீர் திறக்க முடிகிறது” என்று தெரிவித்தார்.

மாண்டியாவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் சி.டி. ரவி, “காவிரி நீர் தமிழகத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா மாவட்டத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்புக்கு பாஜகவின் ஆதரவை தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இண்டியா கூட்டணியை வலுப்படுத்தவே கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கிறது. காவிரி நீரை திறந்து விடுவதன் மூலம் காங்கிரஸ் தங்கள் கூட்டணியை பாதுகாக்கிறது” என குற்றம் சாட்டினார்.

மாண்டியாவில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அம்மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாகவே உள்ளது. மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நேராமல் இருப்பதற்காக மாண்டியா மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து மாண்டியாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி போரலிங்கையா, “காவிரி விவகாரம் தொடர்பாக மாண்டியாவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காவல் துறையைப் பொறுத்தவரை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். போதுமான அளவு காவலர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுமாறும் பொதுச் சொத்துக்களுக்கு யாரும் சேதம் விளைவிக்கக் கூடாது என்றும் காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மாண்டியா மாவட்ட முழு அடைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் குமார், “தற்போது நிலைமை அமைதியாக இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் பாஜக நடத்திய போராட்டம்

முன்னதாக, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகாவில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது. கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர். பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை ஆணையம் தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழகத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இத்தகைய போராட்டங்கள் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. | வாசிக்க > கர்நாடகாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு