மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: ராகுல் காந்தி அறிவிப்பு
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்த மசோதாவைக் கொண்டு வர முதலில் முயற்சித்தது காங்கிரஸ் கட்சிதான். தற்போது இந்த மசோதாவானது, சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது. அதில் 2 விஷயங்களை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒன்று மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலாவதற்கு முன்னதாக ஒபிசி இடஒதுக்கீட்டை உறுதி செய்ய ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். இரண்டாவது தொகுதி மறுவரையறையையும் செய்து முடித்திருக்க வேண்டும். ஆனால் இவை இரண்டுமே செய்யப்படவில்லை.