ம.பி., சத்தீஸ்கர் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு | BJP releases first phase list of candidates before announcement of MP, Chhattisgarh election date
புதுடெல்லி: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பரில் நிறைவடைகிறது.
மபி.யில் 39 பேர்: இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகபாஜக சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 39 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை தயாரிக்க மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் தலைமையில் ஒரு குழுவும், முன்னாள் எம்பி நாராயண் லால் தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே இடம்பெறவில்லை. எனினும்மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தை அவர் தலைமையேற்று நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சத்தீஸ்கரில் 21 பேர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பரில் முடிகிறது. இந்த சூழலில் பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 21 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சத்தீஸ்கர் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல், பதான் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் இதே தொகுதியில் மீண்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.
அந்த தொகுதியில் பாஜக சார்பில் விஜய் பாகேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முதல்வர் பூபேஷ் பாகேலின் நெருங்கிய உறவினர் ஆவார்.