EBM News Tamil
Leading News Portal in Tamil

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் – படியேறும் பக்தர்களுக்கு தடி வழங்கும் திட்டம் தொடக்கம் | Leopards on the Tirupati mountain pass


திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக படியேறி செல்லும் பக்தர்கள் மீது சிறுத்தை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லக்‌ஷிதா எனும் நெல்லூரை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமையன்று உயிரிழந்தாள்.

இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதத்தில் கர்னூலை சேர்ந்த கவுஷிக் எனும் 3 வயது சிறுவனை, சிறுத்தை கவ்விச் சென்றது. ஆனால் பக்தர்கள், சிறுத்தையை விரட்டி சென்றதால், சிறுவனை போட்டுவிட்டு தப்பிச் சென்றது. இந்நிலையில், ”மலையேறி செல்லும் பக்தர்களுக்கு கையில் தடி கொடுத்து அனுப்புகிறோம். ஏனெனில் மனிதனின் முதல் ஆயுதம் தடிதான்” என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி கூறியதோடு, நேற்று முதல் திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு 5 அடி உயர தடியை கொடுத்து அனுப்பும் திட்டத்தை தேவஸ்தானம் தொடங்கியது.

மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தேவஸ்தானத்தின் கடமையாகும். இதற்காக, பக்தர்களை கும்பல், கும்பலாக அனுப்புவதோடு, அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் உடன் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதுதவிர, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பைக்குகளுக்கு மலைப்பாதையில் அனுமதி எனும் புதிய நிபந்தனையையும் விதித்துள்ளது.

தற்போது நேற்று முதல் பக்தர்களுக்கு தடி கொடுத்து அனுப்பும் திட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஆனால், சிறுத்தை, யானை, கரடி போன்ற கொடிய விலங்குகளை விரட்ட 5 அடி தடி போதுமானதா? தடிக்கு சிறுத்தை பயப்படுமா என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: கொடிய விலங்குகளிடமிருந்து பக்தர்களைக் காக்க நிரந்தர தீர்வை தேவஸ்தானம் காண வேண்டும். இரண்டு மலைப்பாதைகளின் இருபுறமும் இரும்புவேலி கண்டிப்பாக அமைக்க வேண்டும். இனியாவது, லக்‌ஷிதாவை போன்றுமற்றொரு உயிர் போகாமல் இருக்க திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு வாயிலாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அனுமதி பெற்றுபோர்க்கால அடிப்படையில் தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் பக்தர்களின் விலை மதிப்பில்லா உயிர்கள் காப்பாற்றப்படும். இவ்வாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.