EBM News Tamil
Leading News Portal in Tamil

18 பாரம்பரிய தொழில் கலைஞர்களின் நலனுக்காக ரூ.13,000 கோடியில் ‘பிஎம் விஸ்வகர்மா’ – மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Rs 13,000 crore PM Vishwakarma for welfare of 18 traditional artists – Union Cabinet approves


புதுடெல்லி: தச்சர், பொற்கொல்லர், காலணி தைப்பவர், தையல் கலைஞர் உள்ளிட்ட 18 முக்கிய பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு ரூ.13,000 கோடி மதிப்பில் கடனுதவி, திறன் மேம்பாடு அளிக்கும் ‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் 169 முக்கிய நகரங்களில் பிரதமரின் இ-பேருந்து சேவை திட்டத்தின்கீழ் 10,000 புதிய மின்சார பேருந்துகளை இயக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: பிரதமரின் இ-பேருந்து சேவை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 3 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 169 நகரங்கள் நாடு முழுவதும் தேர்வுசெய்யப்படும். அந்த நகரங்களில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 10,000 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இத்திட்டத்தின் மதிப்பு ரூ.57,613 கோடி. இதில் ரூ.20,000 கோடியை மத்திய அரசு வழங்கும். இத்திட்டம் மின்சார பேருந்துகள் இயக்கத்துக்கு 10 ஆண்டுகளுக்கு ஆதரவு அளிக்கும். இத்திட்டம் மூலம் நகரப் பேருந்து சேவையில் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்கும், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

18 தொழில் கலைஞர்கள்: விஸ்வகர்மா ஜெயந்தியான செப்.17-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடிஅறிவித்தார். அதன்படி இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தச்சு வேலை, படகு தயாரிப்பு, இரும்புக் கொல்லர், ஆயுதங்கள் தயாரிப்பு, சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு, பூட்டு தயாரிப்பு, பொற்கொல்லர், மண்பாண்டக் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தைக்கும் கலைஞர், கொத்தனார், கூடை – பாய் – துடைப்பம் – தேங்காய் நார் மூலம் கால்மிதியடி தயாரிப்போர், பொம்மை கலைஞர்கள், முடிதிருத்துவோர், பூ மாலை தயாரிப்பவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர், மீன்பிடி வலை தயாரித்தல் ஆகிய 18 வகையான பாரம்பரிய தொழில்களை பாரம்பரியமாக அல்லது குரு-சிஷ்ய முறைப்படி மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தேவையான உதவிகளை பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் வழங்கும்.

இவர்களுக்கு இத்திட்டம் மூலம் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டையுடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை5 சதவீத தள்ளுபடி வட்டியில் கடன் உதவி வழங்கப்படும். இத்திட்டம் மூலம் திறன்களையும் அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.

டிஜிட்டல் இந்தியா: டிஜிட்டல் இந்தியா விரிவாக்க திட்டத்தை ரூ.14,903 கோடியில் விரிவுபடுத்தவும் மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 6.25 லட்சம் ஐ.டி. ஊழியர்களுக்கு எதிர்கால திறன்கள் திட்டத்தின்கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். 2, 3-ம் நிலை நகரங்களில் 1,200 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உதவி செய்யப்படும்.

சுகாதாரம், வேளாண் துறையில் 3 செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கப்படும். 12 கோடி கல்லூரி மாணவர்களுக்கு சைபர் விழிப்புணர்வு பாடங்கள் நடத்தப்படும்.

தகவல் பாதுகாப்பு, கல்வி விழிப்புணர்வு திட்டத்தின்கீழ் 2.65 லட்சம் பேருக்கு தகவல் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் திட்டத்தின்கீழ் மேலும் 9 சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேர்க்கப்படும். ஏற்கெனவே 18 சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன.

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பல மொழிகளின் மொழிபெயர்ப்பு கருவியான ‘பாஷினி’, 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தற்போது 10 மொழிகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

டிஜிலாக்கர் மூலமான டிஜிட்டல் ஆவண சரிபார்ப்பு வசதி இனி குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் கிடைக்கும். 1,787 கல்வி நிறுவனங்களை இணைக்கும் தேசிய அறிவு வலையமைப்பு நவீனமாக்கப்படும்.

விளையாட்டு துறை ஒப்பந்தம்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விளையாட்டு துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் இருநாட்டு விளையாட்டு வீரர்களும் பயனடைவார்கள். இவை உட்பட மேலும் பல திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே திட்டம்: ரயில்வே அமைச்சகத்தின் 7 திட்டங்களை ரூ.32,500 கோடி மதிப்பில் மேற்கொள்ளவும் பொருளாதா விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் மூலம் 9 மாநிலங்களில் 35 மாவட்டங்களில் 2,339 கி.மீ. தூரத்துக்கு பல வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. சரக்கு போக்குவரத்துக்கு இந்த வழித்தடங்கள் மிக முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.