EBM News Tamil
Leading News Portal in Tamil

“வெறும் பேச்சுக்களால் மட்டும் இந்தியா உலகின் குருவாக மாறிட முடியாது” – டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்  | If we want to become Vishwa guru – Delhi Chief Minister Arvind Kejriwal


புதுடெல்லி: “இந்தியா விஸ்வகுருவாக மாறவேண்டும் என்றால் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும், அவர்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம், தடையில்லாத மின்சார வசதி ஆகியவைகள் கிடைக்கவேண்டும்” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

வடக்கு டெல்லியில் உள்ள சத்ரசால் மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். டெல்லி மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்த அவர், சுதந்திரப்போராட்ட வீரரகள், ராணுவ வீரர்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “நான் இன்று சற்று சோகமாக இருக்கிறேன். மணிப்பூர் எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களை கொல்கின்றனர். ஹரியாணாவிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த மக்கள், மற்றொரு பிரிவினருடன் சண்டையிடுகின்றனர்.

நமக்குள் நாம் சண்டையிட்டுக்கொண்டால் நம்மால் எப்படி விஸ்வகுருவாக மாற முடியும்? நாம் விஸ்வகுருவாகி, முதல் நாடாக மாறவேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒரு குடும்பம் போல வாழவேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் டெல்லி அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாட்டிலுள்ள அரசுப்பள்ளிகளின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்காத பட்சத்தில் நாடு விஸ்வகுருவாக மாறமுடியாது. ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டிலுள்ள 10 லட்சம் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும் என்று நான் கணக்கிட்டுள்ளேன். ஆண்டொன்றுக்கு ரூ.1.20 லட்சம் கோடி என்பது இந்தியா போன்ற நாட்டிக்கு பெரிய விஷயம் இல்லை. நாட்டிலுள்ள 17 கோடி குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க ரூ. 7.5 லட்சம் கோடி தேவைப்படும். தற்போது அனைத்து அரசுகளும் இந்தத் தொகையைச் செலவழித்து வருகின்றன.

நம்மிடம் 4.25 லட்சம் மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளன. நமது உச்ச பட்ச மின்சாரத் தேவை 2 லட்சம் மெகா வாட்ஸ்களே. ஆனாலும் இன்றும் நம்மிடம் மின்வெட்டு உள்ளது. இதற்கு நிர்வாகத்திறனின்மையும், தொலைநோக்கு பார்வை இல்லாததுமே காரணம். டெல்லியில் மின்தட்டுப்பாடு இல்லை. இங்கு 24 மணிநேரமும் மின்விநியோகம் உண்டு. அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் நாட்டில் 24 மணிநேரமும் மின்விநியோகம் இருக்க வேண்டும் என்றால், ஊழலுக்கும் திறமையற்ற நிர்வாகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

பல்வேறு வசதிகளை மக்களுக்கு இலவசமாக வழங்குவது குறித்து பலர் என்னை கேலி செய்தும், விமர்சித்தும் வருகின்றனர். நான் மக்கள் முன் இரண்டு விருப்பங்களை முன்வைக்கிறேன். நங்கள் மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் போது அதற்கு ரூ.1.5 லட்சம் கோடி ஆகும். இப்போது மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டுமா அல்லது நான்கு பணக்கார்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டுமா? ஒவ்வொரு எளியமக்களின் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியைக் கொடுக்கும் போது அவர்களும் வசதியானவர்களாக மாற முடியும்.

வெறும் பேச்சுக்களால் மட்டும் இந்தியா விஸ்வகுருவாக மாறிவிட முடியாது. நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சிறந்த சுகாதார வசதிகளை செய்து தராமல் இந்தியா விஸ்வகுருவாக முடியாது. நாட்டிலுள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் மொஹல் கிளினிக்களை தொடங்க ரூ.10,000 கோடி தேவைப்படும். நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவை வழங்க ரூ.2 லட்சம் கோடி செலவாகும்.

உங்களிடமிருந்து பிடுங்கப்பட்ட அதிகாரம் திரும்பக் கிடைக்க நாங்கள் போராடுவோம் என்று நான் டெல்லி மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். சிறந்த கல்வி தொடர்ந்து வழங்கப்படும். வேகம் குறையலாம் ஆனால் வேலை நிற்காது. நமக்குள் நாம் சண்டையிட்டால் இந்தியா ஒரு போதும் முன்னேறாது. நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகில் இந்தியா முதலிடம் பிடிப்பதை யாராலும் தடுக்க முடியாது” இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.