பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆப்பிள் ஜாம் அனுப்பிய பெண் | woman who sent apple jam to Prime Minister Narendra Modi
புதுடெல்லி; நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு தொழில்களைச் சேர்ந்த சுமார் 1,800 பேர் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. உத்தராகண்டின் உத்தரகாசி அருகேயுள்ள ஜாலா கிராம பெண் விவசாயி சுனிதா ரவுதாலாவுக்கும், செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இவர் தனது கிராமத்தில் ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். அதோடு கிராமத்தை சேர்ந்த சுமார் 162 பேரை ஒருங்கிணைத்து விவசாய கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி உள்ளார். இந்த சங்கத்தின் மூலம் ஆப்பிள் ஜாம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் சுனிதா ரவுதாலா, தான் தயாரித்த ஆப்பிள் ஜாமை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பினார். அவரை ஊக்குவிக்கும் வகையில் செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.