கேரளா, கர்நாடகா உட்பட 5 மாநிலங்களில் பிஎப்ஐ முன்னாள் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை | NIA raids houses of former PFI executives in 5 states including Kerala Karnataka
புதுடெல்லி: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பு நாட்டில் மத மோதலை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதாக புகார் எழுந்தது.தீவிரவாத செயலில் ஈடுபடுவதாகவும் அந்த அமைப்பின் மீதுகுற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது. அதன்படி கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரியில் உள்ள கிரீன்வேலி அகாடமியை என்ஐஏ அதிகாரிகள் 2 வாரங்களுக்கு முன்பு முடக்கினர். பிஎப்ஐ அமைப்பின் ஆயுத பயிற்சி மையங்களில் ஒன்றாக இது செயல்பட்டு வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கேரளாவில் முடக்கப்பட்ட 6-வது ஆயுத பயிற்சி மையம் இதுவாகும்.
இந்நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் பிஹார் ஆகிய 5 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த 5 மாநிலங்களில் கன்னூர், மலப்புரம், தட்சின கன்னடா, நாசிக், கொல்ஹாபூர், முர்ஷிதாபாத் மற்றும் கதிஹர் ஆகிய மாவட்டங்களில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு சொந்தமான 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.