EBM News Tamil
Leading News Portal in Tamil

பிரதமரின் முதுகலை பட்டம் குறித்த கருத்து – கேஜ்ரிவால் மீதான வழக்கிற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு | Comment on PM modis master’s degree – Court refuses to stay case against Kejriwal


அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் முதுகலை பட்டம் குறித்து கிண்டலாக கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோருக்கு எதிராக அகமதாபாத் பெருநகர நீதிமன்றத்தில் குஜராத்பல்கலைக்கழகம் சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சமீர் தவே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

“இருவரும் தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய பெருநகர நீதிமன்றத்தில் ஆஜராவதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்க்கின்றனர். முதலில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகட்டும்” என்றும் நீதிபதி சமீர் தவே குறிப்பிட்டார்.

கிரிமினல் அவதூறு வழக்கில் கேஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோரை ஆகஸ்ட் 11-ல் (நேற்று) ஆஜராக பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் இதற்கு ஒப்புக்கொண்ட இருவரும் பிறகு அந்த உத்தரவுக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதனை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.