தமிழகத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பு இல்லை!
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எவ்வாறு குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் கேரள மாநில எல்லைகளில் தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் கேரள மாநிலத்தில் தார்சாலை அமைக்கும் பணிக்காக சென்று விட்டு ஊர் திரும்பினர். ஊர் திரும்பிய 20 பேரில் பெரியசாமி என்பவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். பெரியசாமிக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என அவருடன் பணி புரிந்தவர்கள் மருங்காபுரி வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, கார்த்திக் என்பவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலையடுத்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதாவிடம் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்பு கொண்டு கேட்கையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கும் சாதாரண காய்ச்சலே தவிர நிபா வைரஸ் அறிகுறிகள் ஏதும் இல்லை. எனவே இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.