மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல் | Video goes viral on social media for parents happy to receive son first salary
புதுடெல்லி: இளைஞர் ஒருவர் தனது முதல் சம்பளத்தை பெற்றோரிடம் கொடுத்த பிறகு அவர்களின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை படம் பிடித்து ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். டெல்லி அருகே காஜியாபாத்தை சேர்ந்த ஆயுஷ்மான் சிங் என்ற அந்த இளைஞர் அந்த வீடியோவுக்கு ‘முதல் சம்பளம், நேரடியாக பெற்றோருக்கு…’ என்று தலைப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், ஆயுஷ்மான் சிங் தனது தாயையும் தந்தையையும் ஒன்றாக உட்காரச் சொல்லி கண்களை மூடுமாறு கூறுகிறார். பிறகு தனது சம்பள கவரை அவர்கள் கைகளில் கொடுத்து கண்களை திறந்து பார்க்குமாறு கூறுகிறார். கவரில் ரூ.500 நோட்டுகளை பார்த்த அவரது தாய் ‘வாவ்! என்ன இது..’ என்று மிகவும் ஆச்சரியப்படுகிறார். இதற்கு, ‘எனது முதல் சம்பளம்’ என ஆயுஷ்மான் பதில் அளிக்கிறார்.
‘வாவ்! அற்புதம்.. அருமை.. நிறைய பணம் உள்ளதே..’ என்று அவரது தாய் மீண்டும் வியப்பு தெரிவிக்கிறார். அப்போது தாய், தந்தையின் உணர்ச்சிப் பெருக்கு நம்மை நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. இந்த வீடியோ ஆன்லைனில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ‘‘இந்த செயலியில் நான் பார்த்ததில் மிகவும் ஆரோக்கியமான விஷயம் இதுவாகத்தான் இருக்கும்’’ என்று ஒரு பயனர் கூறினார்.
மற்றொரு பயனர், ‘‘நீங்கள் வாங்கும் பொருளின் விலையோ அல்லது நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் பணத்தின் அளவோ முக்கியமல்ல. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும்போது அவர்களின் கண்களில் ஏற்படும் பெருமைதான் முக்கியம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.