சத்தீஸ்கரில் பழங்குடியின சிறுவர்களிடம் செல்போனில் கார்ட்டூன்களை காட்டிய சிஆர்பிஎப் வீரர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் | CRPF jawan shows cartoon to Chhattisgarh tribal kids on mobile phone viral video
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின சிறுவர்களிடம், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தனது செல்போனில் கார்ட்டூன்களை காட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு திட்டங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சரணடையும் நக்சல்கள் கண்ணியமான வாழ்க்கையைத் தொடங்குவதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த சூழ்நிலையில், அம்மாநிலத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தனது செல்போனில் கார்ட்டூன்களை காட்டுகிறார். அதைப் பார்த்த சிறுவர்கள் புன்னகைக்கின்றனர். இந்த வீடியோ காட்சி பார்ப்பவர்களின் இதயத்தைத் தொடுவதாக அமைந்துள்ளது. அத்துடன் சிறுவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதாகவும் உள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த ஒருவர், “வீடியோவைப் பாருங்கள். அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் அந்தக் குழந்தைகள் முதல் முறையாக காட்டூனைப் பார்க்கின்றனர். நக்சல்களின் ஆதிக்கம் காரணமாக, இவர்கள் குழந்தைப்பருவ அனுபவத்தையும் கல்வியையும் தவறவிட்டிருப்பது என்னை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. இப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் என நம்புகிறேன்’’ என கூறியுள்ளார்.