மழைக் காலத்தில் ஃப்ளூ, டெங்கு பாதிப்பு வராமல் தடுப்பது எப்படி? | How to prevent ourselves from Flu, Dengue during monsoon season
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக் காலம் தொடங்கியுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பருவ மழைக் காலங்களில், பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலுசாமி, கோவை அரசு மருத்துவமனை ‘டீன்’ கீதாஞ்சலி ஆகியோர் கூறும்போது, “பருவ மழைக் காலம் தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
‘டெங்கு’ கொசுக்கள் தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் அதிகம் உற்பத்தியாகும். எனவே வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீர் தேங்காமல் பாரத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி பருகுவது நல்லது. துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல், சளி போன்ற உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் சுயமாக மருத்துகளை உட்கொள்வதை தவிர்த்து மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பரிந்துரைக்கப்படும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நோய் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம்” என்றனர்.
இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு குழுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறும்போது, “இவ்வாண்டு தற்போது வரை ‘டெங்கு’ பாதிப்பு அதிகம் இல்லை. ‘டெங்கு’ பாதிப்பு ஏற்படுத்தும் கொசுக்கள் பெரும்பாலும் காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் தான் கடிக்கும். குழந்தைகள் கை, கால்கள் முழுவதும் மூடும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் கொசுக்கள் முட்டை வைக்கும்.
‘டெங்கு’ பாதிப்பு என்றால் தலைவலி, காய்ச்சல் இருக்கும். இதற்கு எலும்பு உடைக்கும் காய்ச்சல் (போன் பிரேக்கிங் பீவர்) என பெயரிடப்பட்டுள்ளது. அதே போல் கண் இமை மேற்புற பகுதிகளில் வலி இருக்கும். தற்போது குழந்தைகள் மத்தியில் ஃப்ளூ, பன்றிக் காய்ச்சல், ‘ஆர்எஸ்வி’ போன்ற வைரஸ் பாதிப்புகள் காணப்படுகின்றன. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்” என்றார்.