EBM News Tamil
Leading News Portal in Tamil

சொந்த ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினர்: கடலூர் எஸ்பி பாராட்டு | Police Couple Set a Tower Light on Village: Cuddalore SP Appreciation


கடலூர்: தங்களது சொந்த ஊருக்கு உயர் கோபுர மின் விளக்கு அமைத்து வெளிச்சம் பாய்ச்சிய காவல் தம்பதியினரை கடலூர் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி கவுரவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதி விரைவு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி, கடலூர் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார். தனது சொந்த கிராமம் கொங்கராயனூர் பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்தோடு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதோடு, சில சமூக விரோத செயல்களும் நிகழ்ந்துள்ளது.

இதையடுடுத்து பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் பாதுகாப்புக் கருதி காவல் தம்பதியர் தங்களது சொந்த பணத்தில் ரூ.60 ஆயிரம் செலவில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்துள்ளனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்த காவலர் தம்பதியர் அருண்குமார்- காயத்ரி ஆகியோரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.