அண்மைக்காலமாக உடல் நலன் மீது விழிப்புணர்வு அதிகரித்த பிறகு மக்கள் அடிக்கடி உச்சரிக்கும் சொல் ‘கிரீன் டீ’. பால் சேர்த்து காபி, தேநீர் குடிப்பவர்கள்கூட, ‘நான் கிரீன் டீக்கு மாறிட்டேன்…’ என்று சொல்லும் அளவுக்கு ‘கிரீன் டீ’ குறித்த விழிப்புணர்வு பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதே வரிசையில் இப்போது அதிகம் பிரபலம் அடையத் தொடங்கியிருப்பது ‘வொயிட் டீ’.
வொயிட் டீ குறித்தும் அதில் உள்ள நலக்கூறுகளைப் பற்றியும், அதன் வரலாறு குறித்தும் தெரிந்துகொண்ட பின்பு, நீலகரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேயிலைத் தோட்டங்களைப் பார்வையிட்டோம். நீலகிரியின் உச்சியான தொட்டபெட்டாவில் புகழ்பெற்ற ஊட்டி தேயிலைத் தொழிற்சாலையில் கூடுதல் கவனம் வைத்தோம். தேயிலை இந்தியாவுக்குள் நுழைந்த பாதை, தேயிலைத் தயாரிப்பு முறைகள் ஆகியவை பற்றித் தெரிந்துகொண்டு ‘வொயிட் டீ’ பற்றிய கூடுதல் விஷயங்களைச் சேகரிக்கத் தொடங்கினோம்.
தனித்துவம் என்ன? ‘Camellia sinensis’ எனும் தேயிலைத் தாவரத்திலிருந்து மூடியிருக்கும் இலை மொட்டுகள் திறக்கப்படுவதற்கு முன்பே பறிக்கப்பட்டு அவற்றில் உள்ள நீர்த்துவம் குறையும் வரை மெலிதாக உலர்த்தப்பட்டு விற்பனைக்கு வருவதுதான் வொயிட் டீ! அதாவது ஒரு இளம் இலை, ஒரு மொட்டு என்று இருக்கும் தருணத்தில் கவனமாகப் பறிக்கப்பட்டு அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் ஆவியாகி விடாத வண்ணமும், அதிகளவில் ஆக்சிஜனேற்றம் அடையாத வகையிலும் இயற்கையான முறையில் உலர்த்திக் கிடைப்பதுதான் வொயிட் டீயின் ரகசியம். மற்ற தேயிலை ரகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாற்றங்களுக்கு அதிகமாக உட்படாமல் கிடைப்பதால், தேயிலைகளின் முழுமையான பலன்களை வொயிட் டீயின் மூலம் அனுபவிக்க முடியும்.
பெயர்க்காரணம்: மொட்டுக்களின் மீதுள்ள நுன்ணிய வெளிர் நிறமுள்ள ரோமத்தை மையமாக வைத்து வொயிட் டீ என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது. வொயிட் டீக்காகவே தனியாகத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுக் குறிப்பிட்ட பருவத்தில் அறுவடை நடைபெறுகிறது. சீன தேசத்து ஃபுஜியான் மாகாணத்தின் வொயிட் டீ உலக அளவில் புகழ்பெற்றது எனினும், நம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் வொயிட் டீ ரகங்களும் மருத்துவக் குணத்தில் மேம்பட்டவையே! டார்ஜிலிங் வொயிட் டீயைப் பருக டார்ஜிலிங் செல்ல முடியாதவர்கள், நீலகிரி தேயிலைத் தோட்டங்களின் வொயிட் டீயைப் பருகியும் அதன் தனித்துவத்தை உணரலாம்.
எப்படித் தயாரிப்பது? கொதிக்கும் நீரில் தேயிலைகளைப் போட்டுச் சில நிமிடங்கள் காத்திருந்து, அதன் சாரம் வெந்நீரில் இறங்கிய பிறகு பருகுவதுதான் தேநீருக்கான இலக்கணம். இதே இலக்கணம் வொயிட் டீக்கும் பொருந்தும். வெந்நீரில் உயர்தரத் தேயிலைகளைப் போட்டு எடுக்க, தேநீருக்குள் மெல்லிய மஞ்சள் நிறம் இழையோடுகிறது. துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை புதுமையாக இருக்கிறது.பால் சேர்க்காமல் அப்படியே தயாரிக்கப்பட வேண்டிய தேநீரில் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். புதினா இலைகளைக் கசக்கி மேற்தூவிப் பருக அட்டகாசமாக இருக்கும்.
மருத்துவக் குணங்கள்: தேயிலைகளின் முழுமையான பலன்களைப் பெற விரும்புபவர்கள், வொயிட் டீயைத் தேர்ந்தெடுக்கலாம். பாலிபினால்களை நிறைவாக வைத்திருக்கிறது வொயிட் டீ! சுண்ணச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் – சி ஆகியவற்றோடு சிறிது புரதத்தையும் வழங்கவல்லது! வொயிட் டீயில் உள்ள ‘கேடிகின்ஸ்’ கெட்ட கொழுப்பின் அளவுகளைக் குறைக்கவும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
ஐம்பது கிராம் வொயிட் டீயின் விலை நானாறு ரூபாயில் இருந்து தொடங்குகிறது. வொயிட் டீ என்கிற பெயரில் தரம் குறைந்த உலர்ந்த பொடித் தேயிலைகளையும் கலப்படம் செய்து வெளிச் சந்தையில் விற்பனை செய்யவும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். வெண்பனி போர்த்திய குளிர்ச்சிமிக்க அதிகாலையில் சூடான வொயிட் டீயைப் பருக, உடலுக்கு லேசான வெப்பமும் சுறுசுறுப்பும் கிடைப்பதுடன், உயர்தரத் தேயிலைகளின் மருத்துவக் குணங்களும் உடலுக்குள் மெலிதாகப் பரவத் தொடங்கும். வொயிட் டீ… உயர்தரம்!