EBM News Tamil
Leading News Portal in Tamil

சொட்டு நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களால் தெரு நாய்கள் அச்சம் – ஓசூரில் புதிய முயற்சிக்கு பலன் | Stray Dogs Scared by Blue Tinted Water Bottles at Hosur


ஓசூரில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க வீடுகளின் முன்பு சொட்டு நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களை பொதுமக்கள் அடுக்கி வருகின்றனர்.

ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகளிலும் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி கடித்து வருவதோடு, இருசக்கர வாகனங்கள் செல்லும் போது சாலையில் குறுக்கிடுவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. காலை நேரத்தில் நடைபயிற்சி செல்லும் முதியவர்கள் மற்றும் தெருக்களில் விளையாடும் குழந்தைகளும் அண்மைக் காலமாக தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

இந்நிலையில், தெருநாய்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க குடியிருப்பு பகுதி மக்கள் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் சொட்டு நீலத்தை நீரில் கலந்து பாட்டில்களில் நிரப்பி வீட்டின் முன்பு வரிசையாக அடுக்கி வைத்துள்ளனர். இதைப் பார்த்து அச்சப்பட்டு தெருநாய்கள் அப்பகுதிக்கு வருவதைத் தவிர்த்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: தெரு நாய்கள் தெருவில் செல்வோரைக் கடிப்பதோடு, வீடுகளுக்கு முன்பு விளையாடும் சிறுவர்களை விரட்டி வருகின்றன. மேலும், வீடுகளுக்கு முன்பு அசுத்தம் செய்துவிட்டுச் செல்கின்றன. இதனால், வீட்டின் முன்பும், தெருக்களிலும் நிம்மதியாக நடமாட முடியவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்களால் நாய்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நாய்க்கு நீல வண்ணம் அலர்ஜி என்பதை அறிந்து, துணிக்கு பயன்படுத்தும் சொட்டு நீலத்தைத் தண்ணீரில் கலந்து பாட்டில்களில் அடைத்து தெருநாய்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அடுக்கி வைத்து வருகிறோம். மேலும் சிலர் சொட்டு நீலத்துடன் பச்சை வண்ணப் பொடிகளைத் தண்ணீரில் கலந்து பாட்டில்களில் அடைத்து வைத்து வருகின்றனர். இதைப் பார்த்து மிரண்டு பாட்டில்கள் இருக்கும் பகுதிக்கு நாய்கள் வருவதில்லை. இருப்பினும் அதிகரித்து வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, “நீல நிறம் நாய்களுக்குக் கண்களைக் குத்துவது போல் தெரியும். இதனால் நீல நிறத்தைக் கண்டால் நாய்களுக்கு அலர்ஜி என்பது உண்மைதான். ஆனால், தண்ணீரில் கலந்த நீல நிறப் பாட்டில்களைப் பார்த்து நாய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது அறிவியல் ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் மக்களின் முயற்சி பாராட்டுக்குரியது” என்றனர்.