ஜெமினி ‘நானோ பனானா’ ஏஐ இமேஜ் ட்ரெண்ட்டில் அழகும் ஆபத்தும் – ஓர் அலர்ட் பார்வை | All about the Nano Banana Trend and its other side explained
“எல்லோரும் ‘நானோ பனானா’ ஏஐ ரெட்ரோ ஸ்டைல் சாரி ட்ரெண்ட் படம் போட்டாச்சு. நான் பதிவு செய்யாட்டி ‘கூகுள் குத்தமாயிடும்’” என்று கூறி இளம்பெண் ஒருவர் ஏஐ இமேஜ் ட்ரெண்டில் ஐக்கியமானதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் படத்துடன் பகிர்ந்திருந்தார். அதன் கீழே இன்னும் சிலர் ‘ப்ராம்ப்ட்’ கேட்க, அதிலும் ஒரு கூட்டம் ட்ரெண்ட்டில் இணைந்தது.
இந்த சமூக வலைதள, ஏஐ ட்ரெண்ட்கள் எல்லாம் காட்டுத் தீயை விட, கரோனா ‘ஒமிக்ரான்’ வைரஸைவிட மிக வேகமாகப் பரவக் கூடியவை போல! ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் அட வாட்ஸ்அப் ப்ரொஃபைல் வரை பரவலாக பலரும் ஏஐ ஜெனரேடர் படங்களையே டிபியாக வைத்துள்ளனர். இதில் வயது பேதமெல்லாம் இல்லை. இப்படி இணையத்தில் ஏஐ படம் பிரபலமாகிக் கொண்டிருக்க, இதுவும் சைபர் குற்றவாளிகளுக்கான ‘சோர்ஸ்’தான் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம், இந்த ப்ராம்ப்டகள் படத்தை கச்சிதமாகத் தருவதோடு, அதற்குக் காட்டாத மச்சம் வரை ‘கேப்ச்சர்’ செய்வது எப்படி என்று இளம்பெண் ஒருவர் அதிர்ச்சியைப் பதிவு செய்துள்ளார். இந்தப் பின்புலத்தில் ஏஐ ட்ரெண்ட்கள் எத்தனை விளையாட்டானதோ, அத்தனை விபரீதமானது கூட என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இளம் பெண்ணின் அச்சம்: இன்ஸ்டாகிராம் பயனரான இளம்பெண் ஒருவர் தான் முழுக்கை சுடிதார் அணிந்திருக்கும் ஒரு புகைப்படத்தை ஜெமினி ஏஐ இமேஜ் கிரியேட்டரில் உள்ளிட்டு அதற்கு சில ‘ப்ராம்ப்ட்களை’ கொடுத்துள்ளார். அது பற்றி அவர் குறிப்பிடும்போது, “நான் ஜெமினி ஏஐ-யில் எனது படத்தை சேலையில் மாற்றித் தருமாறு ப்ராம்ப்ட் செய்தேன். அது உருவாக்கிக் கொடுத்த அச்சு அசலான படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன்.
காரணம், நான் கொடுத்த புகைப்படத்தில் முழுக்கை சுடிதார் அணிந்திருந்தேன். அது எனக்குக் கொடுத்த படத்தில் ஸ்லீவ்லெஸ் ரவிக்கை அணிவிக்கப்பட்டிருக்க, அதில் என் தோளில் இருந்த மச்சம் தெரிந்தது. ஏஐ-க்கு எனக்கு அந்த இடத்தில் மச்சம் இருக்கும் என்று எப்படித் தெரிந்தது? இது எனக்கு பயமாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.
நிபுணர்கள் விளக்கம் – அந்த இளம் பெண்ணின் புலம்பலுக்கு சில டெக் நிபுணர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். ஜெமினி என்பது கூகுளின் டூல். இந்த ஏஐ டூல் நீங்கள் கொடுக்கும் ப்ராம்ப்ட்டைக் கொண்டு படத்தை மீள் உருவாக்கம் செய்யும்போது உங்களுடைய அனைத்து ஸ்டோர்டு படங்களையும் ஒரு நோட்டம் விடும். அப்படித்தான் உங்களுடைய பழைய படங்களில் இருந்து இந்த மச்சத்தை அடையாளம் கண்டு கொண்டுவந்து இந்தப் படத்தில் புகுத்தியிருக்கும்” என்றார்.
இதையே பலரும் கூறியிருந்தனர். இன்னொரு டெக் ஜாம்பவான், ஏஐ நாம் கொடுக்கும் ப்ராம்ப்ட்டுக்கு ரியலிஸ்டிக் படத்தை உருவாக்கும் கட்டளையை உள்வாங்கியிருக்கும். அதனால், நாம் கேட்டவுடன் அது நம் டிஜிட்டல் ஃபுட்பிரின்ட் முழுவதிலும் உலாவந்துவிட்டு அச்சு அசலாக இல்லாவிட்டாலும் அசலுக்கு நெருக்கமான படங்களைத் தருகிறது என்று கூறியிருந்தார்.
இங்கே இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, நானோ பனானா ஏஐ பயன்படுத்துவோரின் இதுபோன்ற சந்தேகங்களுக்கு கூகுள் நிறுவனமே பதில் சொல்ல வேண்டும். இரண்டு, இதுபோன்ற ஏஐ டூல்களைப் பயன்படுத்தும்போது நெட்டிசன்கள் கவனமாக இருக்க வேண்டும்.
எல்லாம் ப்ராம்ப்ட் செய்யும் வேலை… – ஒரு கம்ப்யூட்டர் டெஸ்க் டாப் அருகே நமது மினியேச்சர் படத்தை உருவாக்குவது, ஏதோ கேங்ஸ்டர் பட ஹீரோ, ஹீரோயின் போல் லாங் கோட்டோடு புறாக்கள் பறக்கம் பின்னணியில் நிற்பது, சிகரெட் புகைக்கும் 80-ஸ் ஹீரோ போல் காட்சி கொடுப்பது, ஷிஃபான் சேலையில் ஒரு பக்க காதருகே பூவோடு வசீகரமாக மிளிர்வது, கங்கை நதிக் கரையில் பக்தி பழமாக அமர்ந்திருப்பது என ஜெமினி ஏஐ ப்ராம்ப்ட்கள் இணையத்தில் மலிந்து, குவிந்து கிடக்கின்றன.
இத்தகைய ப்ராம்ப்ட்கள் இனி எதிர்காலத்தில் படைப்பாக்கத் துறையை ஆட்டிவைக்கும் என்று விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர். ஏற்கெனவே ஏஐ மியூஸிக் டைரக்டர், ஏஐ உருவாக்கிய திரைப்படம் வரை வரிசை கட்டி நிற்கின்றன. நம் செல்போனில் இருக்கும் மெட்டா ஏஐ-யிடம் கவிதை எழுதித் தரச் சொன்னால் செய்கிறது, குட்டிக் கதை எழுதச் சொன்னாலும் செய்கிறது.
இதே வேகத்தில் ஏஐ வளர்ச்சி செல்வது மனிதனின் படைபாற்றலை மழுங்கச் செய்யும். எதற்கெடுத்தால் ஏஐ அசிஸ்டன்ஸ் சார்ந்திருக்கச் செய்யும் என்று எச்சரிக்கப்படுகிறது.
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இந்த ப்ராம்ப்ட்களை எழுத நிச்சயம் ஒரு படைப்பாற்றல் சிந்தனை கொண்ட மனிதன் தேவைப்படுகிறான். அதனால் ஏஐ படைப்பாற்றாலை விழுங்கிவிடாது, யாருடைய வேலையையும் பறித்துக் கொள்ளாது. மாறாக, படைப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும். மனிதன் போல் சோர்ந்து போகும், சலித்துக் கொள்ளும், எதிர்த்துப் பேசும் போக்கெல்லம் இல்லாமல் சொன்னதை உள்வாங்கி சிறப்பாகச் செய்யும் உதவியாளனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎஸ் அதிகாரியின் எச்சரிக்கை: இந்தப் பின்னணியில், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், இதுபோன்ற ஆன்லைன் ட்ரெண்ட்கள் குறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது பதிவில், “ஆன்லைன் ட்ரெண்ட்கள் எல்லாம் பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால் இதன்மூலம் நாம் நமக்கே தெரியாமல் எவ்வளவு தனிநபர் விவரங்களை இழக்கிறோம் என்பதை கவனத்தில் கொள்வதில்லை. அதுதான் நானோ பனானா ட்ரெண்ட்டிலும் நடக்கிறது.
இதுபோன்ற ட்ரெண்ட்கள் திடீரென முளைத்து அதேவேகத்தில் மங்கிவிடும். ஆனால் இவற்றில் உங்கள் புகைப்படத்தை நீங்கள் உள்ளீடு செய்வதன்மூலம் உங்களைப் பற்றிய தரவுகள் சேமிக்கப்பட்டுவிடும். அது சைபர் குற்றவாளிகளின் கைகளுக்கும் செல்லும். சில நேரங்களில் நீங்கள் பெரியளவு பணத்தை இழக்க நேரிடலாம். ஏதேனும் அந்தரங்க புகைப்படத்தை எடுத்துவைத்துக் கொண்டு மிரட்டப்படலாம். அதனால், இலக்கு தெரியாத பாதையில் பயணிக்கும்போது கவனம் தேவை. உங்கள் படங்களை, தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் பகிரும் முன்னர் பலமுறை யோசித்துச் செயல்படுங்கள்” என்று கூறியுள்ளார்.