‘தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைகிறது’ – மனநிலையில் அசாதாரண மாற்றமா? | average age of those who commit suicide is decreasing explained
மதுரை: தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று மனநல மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
தற்கொலை எண்ணத்தை அடியோடு வரவிடாமல் தடுக்க வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்.10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது என்றால், அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய வேண்டும்.
‘தற்கொலையைப் பற்றிய கூற்றை மாற்றுவோம்’ என்ற கருப்பொருளைக் கொண்டு உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் மீதான பார்வையானது அவர்களைப் பற்றி உருவாக்கப்படும் புனைவுகளைப் பொருத்து உள்ளது.
தற்கொலை முயற்சியில் ஈடுபடு வோரை வலியில் உள்ளவர் களாகவும், தேவை உள்ளவர்களாகவும் பார்ப்பதைவிட கோழைகளாகவும், வேண்டுமென்றே செய்பவர்களாகவும் பார்க்க வைப்பது அவர்களைப் பற்றி புனையப்படும் கருத்துகள்தான். எனவே, இந்தப் பார்வையை மாற்றும் நோக்கில் தனிநபர் முதற்கொண்டு கொள்கை வகுப்பாளர்கள் வரை தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நபர்கள் மீதான பார்வையை மாற்றும் நோக்கத்தோடுதான் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. கரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு தற்கொலையில் ஈடு படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தற்கொலையில் ஈடுபடுவோரின் சராசரி வயது குறைந்து கொண்டே வருவது குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் மனநிலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களின் வெளிப்பாடாகும் என்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மனநலத்துறைத் தலைவர் டாக்டர். ஆ.காட்சன் கவலை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பெற்றோரின் கண்டிப்பின்மை, கல்வி நிறுவனங்களில் தண்டனைகளற்ற அணுகுமுறை முதல், சமூகக் கட்டுப்பாடுகளில் தளர்வு என எவ்வளவுதான் விதி முறைகள் தளர்த்தப்பட்டாலும் இளம் பருவத்தினரின் தற்கொலைச் சம் பவங்கள் அதிகரித்து வருவதற்கு தற்காலத்தைய காரணங்கள் பல உண்டு.
அதிலும் குறிப்பாக இளம் வயதிலேயே போதைப்பொருள் பழக்கங்களுக்கு உள்ளாவது, வயதுக்கு மீறிய செயல்பாடுகளில் ஈடுபட வைக்கும் செல்போன் பயன்பாடு, முன்மாதிரியற்ற பெற்றோரின் வாழ்க்கை ஆகியவைகளும் அடங்கும். ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கும், தண்டனைகளுக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் வகுக்கப்படும் பள்ளி ஆசிரியர்களுக்கான நெறிமுறைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனநிலையை வளர்ப்பதைவிட பிரச்சினையே இல்லாமல் வாழும் சூழ் நிலையை உருவாக்க முயலும் பெற்றோர் என வளரும் பருவத்திலேயே முரண் பாடுகளைச் சந்திக்கும் இளைய தலைமுறையினர், பிற்காலத்தில் சிறிய தோல்விகளில்கூட துவண்டு வாழ்க் கையை முடிக்கும் முடிவுக்கு வரு கின்றனர்.
குடும்பத்துக்கு வெளியே ஆங்காங்கே நிகழும் தற்கொலைகள் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்படுவதால் Copy cat suicide என்ற ‘தற்கொலை மாதிரியைப்’ பின்பற்றும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. தன்னைத் தானே தண்டிக்கும் தற்கொலைகளைவிட பிறரைப் பழிவாங்கும் நோக்கில் செய்யப்படும் தற்கொலைகளுக்கு இது ஒரு முக்கியக் காரணம்.
இந்தியாவில் தனிநபர்களிடையே ஏற்படும் உறவுச்சிக்கல்கள்தான் தற் கொலைகளுக்கான முதன்மைக் காரணம். சமுதாய, வாழ்வியல் சம்பந்தப் பட்ட காரணங்கள் இரண்டாம் இடம் பெறுகின்றன. மற்ற காரணங்களை ஒப்பிடும்போது மனநல பாதிப்பினால் தற்கொலையில் ஈடுபடுவோர் சொற்பமே.
ஆனால், தற்கொலை முயற்சி என்றாலே மனநல மருத்துவரிடம் சென்றால் சரியாகிவிடும் என்ற பொத்தாம் பொதுவான கருத்து குடும்ப நபர்கள், சமுதாயம், அரசாங்கம், கல்விக் கூடங்கள் ஆகியவற்றின் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அல்லது தாண்டிச்செல்ல வைக்கும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் அனைவருமே மனநோயாளிகள் அல்ல; எல்லா தற்கொலைகளுக்கும் மனநல ஆலோசனை தீர்வை தராது. மனநோய்கள் மற்றும் ஆளுமைக் கோளாறுகளால் நிகழும் தற்கொலை களைத்தான் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் தடுக்கும்.
மற்ற பெரும் பான்மையான காரணங்களுக்கு வேரிலிருந்தே செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்தான் தற்கொலையைத் தடுக்குமே தவிர, மனநல ஆலோசனை என்ற மருந்தைத் தெளிப்பது பலன் தராது. இதில் குழந்தை வளர்ப்பு முறை, பள்ளிகளில் தேவையான கண்டிப்புகள், ஊடகங்களின் சமுதாய அக்கறையுடன் கூடிய தணிக்கைகள், மது போதை பயன் பாடு மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும். தற்கொலை எண்ணங்களைப் பற்றி பேசுவதால் அது அதிகரித்துவிடும் என்ற பயம், பாதிக்கப்பட்ட நபரின் மனநிலையை அறிந்துகொள்வதைத் தடுக்கும் மூட நம்பிக்கையாகும்.
தற்கொலை எண்ணத்தை வெளிப் படுத்தினால் நம்மைத் தவறாகக் கணித்துவிடுவர் என்று மனதில் அடக்கிவைப்பது ஆபத்து. கொள்கை வகுப்பாளர்களும் இதுவரை செய்த மேலோட்டமான அணுகுமுறையைக் கைவிட்டு அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து அவற்றை களைவதே, தற்கொலை குறைந்த சமுதாயத்தை உருவாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.