EBM News Tamil
Leading News Portal in Tamil

100 வயது தாயாரை பராமரிக்கும் 80 வயது மகள்: சிவகங்கை குக்கிராமத்தில் நெகிழ்ச்சி | 80 Years Daughter Take Care 100 Year Old Mother at Sivaganga


சிவகங்கையில் அடிப்படை வசதியே இல்லாத கிராமத்தில் 100 வயதைக் கடந்த தாயாரை 80 வயது மகள் பாசத்துடன் பராமரிக்கிறார்.

சிவகங்கை அருகே பொன்னங்குளம் ஊராட்சி வீரவலசைக் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தன. குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 30 குடும்பங்களே வசிக்கின்றன.

இக்கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயதான வள்ளி. அவரது கணவர் மறைந்த நிலையில் 2 மகன்களும் குடும்பத்துடன் வெளியூர்களில் வசிக்கின்றனர். எனினும் 100 வயதைக் கடந்த தனது தாயார் கருப்பாயிக்காக அடிப்படை வசதி இல்லாத இந்த கிராமத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே வள்ளி வசிக்கிறார்.

தாயாருக்கு 3 வேளையும் உணவு கொடுப்பது, உடை அணிந்து விடுவது உட்பட அனைத்துத் தேவைகளையும் அன்போடும், பாசத்தோடும் நிறைவேற்றி வருகிறார். இது அப்பகுதியினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மூதாட்டி வள்ளி கூறுகையில், ‘ 100 வயதைக் கடந்தாலும் எனது தாயாருக்கு இதுவரை சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் இல்லை என அவரைப் பரிசோதித்த மருத்துவரே ஆச்சரியப்பட்டார். அவர் 4 தலைமுறைகளைப் பார்த்து விட்டார். நான் ஒரே மகள் என்பதால் அவரைக் கவனிக்கிறேன். எனக்கும் 80 வயது ஆகிவிட்டதால், எனது தேவைகளைச் சிரமத்தோடு நிவர்த்தி செய்தாலும், எனது தாயாரைப் பாசத்தோடுதான் கவனிக்கிறேன். அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருந்தாலும் பராமரிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

வயதான தங்களது பெற்றோரை என்றுமே கைவிடக் கூடாது என்பதற்கு வள்ளி இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.