உணவு சுற்றுலா: ஜாங்கிரி டீ | Unavu sutrula series chapter jangiri tea in udumalpettai thoovanam aruvi
சின்னார் வனப்பகுதிக்குள் இருக்கிறது கண்களைக் கொள்ளை கொள்ளும் தூவானம் அருவி. உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் நடுக்காட்டுக்குள் ஒளிந்திருக்கிறது இந்தப் பேரழகான அருவி. மலைச் சாலையில் பயணிக்கும்போது, இந்த அருவியைத் தூரத்திலிருந்து பார்க்க முடியும் என்றாலும், மிக அருகில் சென்று பார்க்க சில கி.மீ. தூரம் ‘ட்ரெக்கிங்’ செல்ல வேண்டும்.
வனத்துறை சார்பில் இந்த அருவிக்கு ‘ட்ரெக்கிங்’ ஏற்பாடு உண்டு. ‘ட்ரெக்கிங்’ செல்லும் பாதையில் வாய்ப்பிருந்தால் யானைகள், அணில்கள் மட்டுமன்றிப் பல்வேறு பறவை இனங்களைப் பார்க்கலாம். தூவானம் அருவிக்குச் செல்ல ‘ட்ரெக்கிங்’ தொடங்கும் இடத்தில் வனத்துறை அலுவலகம் உண்டு. அதன் அருகிலேயே இருக்கிறது ஒரு மண்ணால் கட்டப்பட்ட கடை. மண்ணால் வடிவமைக்கப்பட்ட அடுப்பு, மரக்கட்டைகளால் இழைக்கப்பட்ட மேசை, நாற்காலிகள் எனக் கிராமத்து உணர்வை அந்த மண் கடை நிச்சயம் தரும். குளிருக்கு இதமாகத் தேநீர், காபி ஆகியவற்றோடு ‘ட்ரெக்கிங்’ செல்பவர்களுக்குத் தின்பண்டங்களை விற்பனை செய்யும் இடமாகவும் அந்த மண் கடை செயல்படுகிறது.
மண் கடையின் ஸ்பெஷல் ’ஜாங்கிரி டீ’. பெயரைக் கேட்டதும் தேநீருக்கு இலவச இணைப்பாக ஏதாவது இனிப்பை வழங்குவார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால், அதில் சேர்க்கும் பொருள்களையும், அதன் தயாரிப்பு முறையையும் தெரிந்துகொண்ட பிறகு பெயருக்கான காரணம் புரிந்தது.
எப்படித் தயாரிப்பது? – தூவானம் அருவிக்கு மிக அருகில் இருக்கிறது வெல்லத்துக்குப் பிரபலமான மறையூர் மலைக்கிராமம். அந்தப் பகுதியின் கரும்பு வெல்லம் ஜாங்கிரி டீயின் முக்கிய உறுப்பினர். கூடவே இயற்கையாக இனிப்புச் சுவையை அளிக்கும் நன்னாரி, வாசனையால் மதிமயக்கச் செய்யும் ‘நறுமணமூட்டிகளின் ராணி’ ஏலக்காயும் சேர்ந்து ஜாங்கிரி டீயின் மதிப்பைப் பல மடங்கு கூட்டுகின்றன. வெல்லத்தின் அதி இனிப்பும், நன்னாரியின் மறைமுக இனிப்பும், ஏலத்தின் வாசனையும் சேர்ந்து ஜாங்கிரி டீக்கான பெயரை உருவாக்கி இருக்கிறது. கொதிக்கும் நீர்க் கலனில் உடைத்த வெல்லத்தையும், இடித்த நன்னாரி வேரையும், நசுக்கிய ஏலத்தையும் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து எடுக்க, ஜாங்கிரி டீ நறுமணம் பரப்பத் தொடங்கிவிடுகிறது.
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது. மலைப்பகுதியில் நிலவும் குளிருக்குச் சூடான தேநீரைப் பருக, ஜாங்கிரி போன்ற அதி இனிப்பைக் கொடுக்காமல், தேவையான அளவுக்கு இன்சுவையை நாவில் படரச் செய்கிறது ஜாங்கிரி டீ!
இன்சுவை மூலிகை டீ: இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட கரும்பு வெல்லம் உடலுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. அதுவும் பாரம்பரியமிக்க மறையூர் வெல்லம் தேநீரைத் தனித்துவமாக்குகிறது. உடலின் பித்தத்தைத் தணிக்கும் நன்னாரிக்கோ வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை இருக்கிறது. ஏலத்தில் உள்ள நலம் கொடுக்கும் வேதிப்பொருட்கள் செரிமானத்தைத் தூண்டும் திறனைக் கொண்டிருப்பவை. ஜாங்கிரி டீயில் சேரும் மூன்று முக்கியப் பொருள்களும் அங்கிருக்கும் பகுதியிலேயே கிடைப்பதால் தரத்துக்கும் குறைவில்லை.
இனிப்புச் சுவை இழையோடுவதால் ஜாங்கிரி டீ என்று பெயர் பெற்றிருந்தாலும் உண்மையில் இது இன்சுவையைக் கொடுக்கும் மூலிகை டீ! சின்னார் வனப்பகுதிக்குக் காட்டுலா செல்ல திட்டமிடுபவர்கள், மூணாறு பகுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் மறக்காமல் இந்த ஜாங்கிரி டீ விற்பனை செய்யும் பகுதியில் கொஞ்ச நேரம் இளைப்பாறுங்கள். ஜாங்கிரி டீயைப் பருகிக் கொண்டே பறவைகளின் இன்னிசைக் கச்சேரியை அனுபவிக்கலாம்! ஆம் அது பல்லுயிரியம் நிறைந்த பகுதியும்கூட!
கட்டுரையாளர், சித்த மருத்துவர்.